அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கோவில் கும்பாபிஷேகம் நடத்துவதில் ஏற்பட்ட தகராறில், இளம்பெண் ஒருவரைத் தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகிகள் பொது இடத்தில் கண்மூடித்தனமாகத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதல் நடத்தும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், குற்றவாளிகளைக் கைது செய்யாவிட்டால் குடும்பத்தோடு போராட்டத்தில் ஈடுபடப் போவதாகப் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் எச்சரித்துள்ளனர்.


வழக்கின் பின்னணி:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கோட்டியால் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் பரம்பரை தர்மகர்த்தாவாகத் தமிழரசன் என்பவர் இருந்து வருகிறார். இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாகத் தமிழரசன் குடும்பத்தினருக்கும், அதே ஊரைச் சேர்ந்த அறிவழகன் மகன் ரவிக்குமார் தரப்பிற்கும் இடையே நீண்ட நாட்களாகப் பிரச்சினை இருந்து வந்துள்ளது. ரவிக்குமார் தற்போது தவெக கட்சியில் உறுப்பினராக உள்ளார்.
கேள்வி கேட்ட பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்:
இந்நிலையில், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளுக்காகத் தவெக நிர்வாகி ரவிக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நேற்று கோவிலுக்கு வந்துள்ளனர். அப்போது அங்கு வந்த தர்மகர்த்தா தமிழரசனின் மகள் வேம்பரசி, “கோவில் கும்பாபிஷேகம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. நீங்கள் கும்பாபிஷேகம் நடத்துவதாக இருந்தால் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் காவல்துறையிடம் உரிய அனுமதி கடிதம் பெற்று வாருங்கள்” என்று தட்டிக்கேட்டுள்ளார்.
இதில் கடும் ஆத்திரமடைந்த தவெக நிர்வாகிகள் ரவிக்குமார் மற்றும் கணேஷ் பிரபு ஆகிய இருவரும் சேர்ந்து, பொது இடம் என்றும் பாராமல் வேம்பரசியைக் கண்மூடித்தனமாகத் தாக்கி கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் பலத்த காயமடைந்த வேம்பரசி சுயநினைவை இழந்து, தற்போது அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ:
தவெக நிர்வாகி ரவிக்குமார், இளம்பெண் வேம்பரசியைப் பொது இடத்தில் வைத்துத் தாக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகப் பரவி வருகிறது. இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட தவெக நிர்வாகிகளைப் போலீசார் இதுவரை கைது செய்யாமல் இருப்பது ஏன் என்றும், அவர்கள் விஜய் கட்சியின் நிர்வாகிகள் என்பதால் காவல்துறை தயங்குகிறதா என்றும் பொதுமக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களும் கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் சகோதரரின் ஆவேசம்:
இது குறித்துப் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் சகோதரர் கார்த்திக் செய்தியாளர்களிடம் கூறுகையில்:
”கோவில் கும்பாபிஷேகம் தொடர்பாக ஏற்கனவே இரு தரப்பினருக்கும் இடையே ஆர்.டி.ஓ. (RTO) முன்னிலையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது. இந்தச் சூழலில், சட்டப்படி அனுமதி கடிதம் கேட்டு வினவிய என் சகோதரி வேம்பரசியைத் தவெக நிர்வாகிகள் ரவிக்குமாரும், கணேஷ் பிரபுவும் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். அவர் தற்போது சுயநினைவின்றி மருத்துவமனையில் உள்ளார்.
கட்சித் தொண்டர்களின் இந்த அராஜகத்திற்கு முதலமைச்சர் விஜய் என்ன பதில் சொல்லப் போகிறார்? குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட தவெக நிர்வாகிகளைப் போலீசார் உடனடியாகக் கைது செய்ய வேண்டும். இல்லையென்றால், அடுத்த கட்டமாகக் கிராம மக்களின் ஒத்துழைப்போடு எங்கள் குடும்பமே திரண்டு மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம்.” என எச்சரித்தார்.
இளம்பெண் மீது அரசியல் கட்சி நிர்வாகிகள் நடத்திய இந்தத் தாக்குதல் சம்பவம் ஜெயங்கொண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
