HomeBreaking Newsதிமுக எம்.எல்.ஏ-க்களுக்கு ரூ.50 கோடி பேரம்; த.வெ.க அரசு மீது ஆளுநரிடம் ஆதாரங்களுடன் திமுக புகார்:...

திமுக எம்.எல்.ஏ-க்களுக்கு ரூ.50 கோடி பேரம்; த.வெ.க அரசு மீது ஆளுநரிடம் ஆதாரங்களுடன் திமுக புகார்: ஆர்.எஸ்.பாரதி அதிரடி பேட்டி!

-

- Advertisement -

தமிழ்நாட்டில் மக்கள் பணிகளைச் செய்யாமல், திமுக சட்டமன்ற உறுப்பினர்களை இழுப்பதற்காகவே த.வெ.க அரசு குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகிறது. இதுகுறித்து ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம்” என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எச்சரித்துள்ளார்.
ஆர்.எஸ்.பாரதி

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் (மக்கள் பவன்), தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை திமுக குழுவினர் இன்று நேரில் சந்தித்துப் புகார் மனு ஒன்றை அளித்தனர். இக்குழுவில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி. வில்சன், சட்டத்துறை இணை செயலாளர் பரந்தாமன் மற்றும் அமைப்புத் துணை செயலாளர் ஆஸ்டின் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

we-r-hiring

த.வெ.க அரசு மீது அடுக்கடுக்கான புகார்கள்
​ஆளுநரைச் சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, த.வெ.க அரசு மற்றும் முதலமைச்சர் விஜய் மீதான புகார்களைப் பட்டியலிட்டார்: அரசு கூட்டங்களில் வெளிநபர்கள் தலையீடு: “கடந்த 1-ஆம் தேதி அன்று அரசுக்கும் தொடர்பு இல்லாத ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி ஆகிய இரு தனி நபர்கள், அமைச்சரவைக் கூட்டம் மற்றும் அரசு உயர் மட்டக் கூட்டங்களில் முதலமைச்சர் விஜய் முன்னிலையிலேயே அமர்ந்து அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறார்கள். இதுகுறித்து நாங்கள் கூறிய போது, ‘அவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றால் இருவரையும் அமைச்சர்களாக்க வேண்டியதுதானே’ என்று ஆளுநரே சிரித்துக் கொண்டே கூறினார்.”

அனிதா ராதாகிருஷ்ணன் கைதும், மிரட்டலும்:
“7 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், 2 முறை அமைச்சராகவும் இருந்த அனிதா ராதாகிருஷ்ணனை நேற்று அவதூறு வழக்கில் காவல்துறை கைது செய்துள்ளது. விசாரணை என்ற பெயரில் அவரைத் திருச்செந்தூரிலிருந்து தூத்துக்குடிக்குக் கொண்டு சென்று, 5 மணி நேரம் காவல்துறை அதிகாரிகள் துன்புறுத்தி, பயமுறுத்தி த.வெ.க-வில் சேருமாறு வற்புறுத்தியுள்ளனர்.”

எம்.எல்.ஏ ஆஸ்டினுக்கு அமைச்சர் பதவி ஆஃபர்:
“திமுக அமைப்புத் துணை செயலாளரும், எம்.எல்.ஏ-வுமான ஆஸ்டினிடம், ‘எந்த மந்திரி பதவி கேட்டாலும் தருகிறோம், த.வெ.க-விற்கு வாருங்கள். உங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இடைத்தேர்தலில் நில்லுங்கள், உங்களுக்காக விஜய் பிரச்சாரம் செய்வார்’ என ஆஃபர் தந்துள்ளனர். எங்களிடம் இதற்கான ஆதாரம் உள்ளது.”

வேப்பனஹள்ளி எம்.எல்.ஏ-வுக்கு ரூ.50 கோடி பேரம்:
“ஓசூர் அருகே உள்ள வேப்பனஹள்ளி தொகுதி திமுக எம்.எல்.ஏ சீனிவாசனிடம், ‘நீங்கள் த.வெ.க-வில் இணைந்து விடுங்கள், உங்களுக்கு 50 கோடி ரூபாய் தருகிறோம்; என்ன வாரியம் கேட்டாலும் தருகிறோம்’ எனப் பேரம் பேசியுள்ளனர்.”

ஓ.எஸ். மணியனிடம் பேசிய விஜயபாஸ்கர்:
“த.வெ.க-வில் நேற்றுதான் இணைந்த விஜயபாஸ்கர், உடனடியாக ஓ.எஸ். மணியனிடம் பேசி, ‘நீங்கள் வந்துவிட்டால் மந்திரி பதவி தருகிறோம்’ எனக் குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளார். ஆள் பிடிப்பதற்காகவே இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.”

சினிமா பாணியில் நடக்கும் ஆட்சி
​முதலமைச்சர் விஜய்யின் தனிப்பட்ட செயலாளரின் அத்துமீறல்கள் குறித்துப் பேசிய ஆர்.எஸ்.பாரதி, “முதலமைச்சருக்கு எனத் தனி Protocol உள்ளது. ஆனால் விஜய்யின் தனிப்பட்ட செயலாளர் அனைத்து விழாக்களிலும் வந்து காவல்துறையினரை பிடித்துத் தள்ளுகிறார். டிஜிபியை தள்ளிவிட்டு முதலமைச்சர் பக்கத்தில் நிற்கிறார். ஏதோ சினிமா காட்சி போல் எல்லாம் நடக்கிறது. 1952-ல் இருந்து தமிழ்நாட்டில் இதுபோன்று குதிரை பேரம் நடந்ததே இல்லை. இது மாநிலத்தின் மதிப்பைக் கெடுக்கும் செயல் என ஆளுநரே வருத்தப்பட்டார்” என்றார்.

“அடுத்தகட்டம் நீதிமன்றம்”
​ஆளுநரைச் சந்தித்ததற்கான காரணம் குறித்து விளக்கிய அவர், “ஆட்டுக்கு தாடியும், நாட்டிற்கு கவர்னரும் தேவையில்லை என்பதுதான் அண்ணாவின் காலம் தொட்டே திமுகவின் கொள்கை. நேற்று கூட ஆளுநரின் ஆய்வுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். அது கொள்கை முடிவு. ஆனால், குதிரை பேரம் தொடர்பாகச் சட்ட ரீதியாக நீதிமன்றத்திற்குச் செல்லும்போது, சம்பந்தப்பட்ட அதிகார அமைப்பிடம் (Authority) புகார் அளித்தீர்களா எனக் கேட்பார்கள். அதற்காகவே ஆளுநரிடம் மனு அளித்துள்ளோம். ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றம் செல்வோம்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

MUST READ