தாம்பரத்தில் துப்பாக்கி, கத்திகளுடன் போதை மாத்திரைகள் விற்று வந்த 4 பேரை, மொபைல் போன் லொகேஷனை வைத்து போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் கைது செய்துள்ளனர்.
சென்னை அடுத்த தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இளைஞர்களைக் குறிவைத்து வலி நிவாரணி மாத்திரைகள் போதைக்காக விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க போலீசார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், முடிச்சூர் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (26) என்பவரின் மொபைல் போன் சிக்னலை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இவர் மீது ஏற்கனவே 2 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 10-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. சமீபத்தில் இவரது மொபைல் லொகேஷன் மும்பை வரை சென்று, மீண்டும் தாம்பரம் திரும்பியதை போலீசார் கண்டறிந்தனர்.

சந்தேகமடைந்த போலீசார் குறிப்பிட்ட லொகேஷனுக்குச் சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, சக்திவேல் (26), ரஞ்சித்குமார் (26), ரூபன் (எ) கென்னி (20) மற்றும் மனோஞ்குமார் (26) ஆகிய நான்கு பேர் போலீசாரிடம் சிக்கினர். அவர்களிடமிருந்து பின்வரும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன, 420 போதை மாத்திரைகள் (வலி நிவாரணிகள்),1 துப்பாக்கி,3 பட்டா கத்திகள்,6 மொபைல் போன்கள்,பாதுகாப்புக்கு போலி துப்பாக்கி, கத்திகள்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின. அவர்கள் வைத்திருந்த துப்பாக்கி, நிஜத் துப்பாக்கியைப் போலவே சத்தம் எழுப்பக்கூடியது, ஆனால் அதில் தோட்டாக்கள் பயன்படுத்த முடியாது. போதை மாத்திரைகளை விற்கும்போது ஏற்படும் மோதல்களைச் சமாளிக்கவும், தங்களின் பாதுகாப்புக்காகவும் இந்த போலி துப்பாக்கி மற்றும் பட்டா கத்திகளைப் பயன்படுத்தியதாக அவர்கள் ஒப்புக்கொண்டனர். மும்பையில் உள்ள சில நபர்கள் மூலம் இவர்களுக்கு இந்த மாத்திரைகள் கிடைத்துள்ளன. முன்பு கொரியர் மூலம் இவற்றை வரவழைத்த நிலையில், கடந்த சில மாதங்களாக போலீசாரின் கண்காணிப்பு பலத்ததால், நேரடியாக ரயிலில் மும்பை சென்று மாத்திரைகளை வாங்கியுள்ளனர். பின்னர் போலீசாரிடம் மாட்டாமல் இருக்க ஆந்திராவில் ரயிலில் இருந்து இறங்கி, அங்கிருந்து பேருந்து மூலம் தாம்பரம் வந்தடைந்துள்ளனர். ஆனால், போலீசாரின் மொபைல் டவர் லொகேஷன் கண்காணிப்பால் இவர்களின் திட்டம் முறியடிக்கப்பட்டது.
மும்பையில் வெறும் 50 ரூபாய்க்கு வாங்கப்படும் ஒரு மாத்திரையை, தாம்பரம் அற்புதம் நகர் சுடுகாடு, முடிச்சூர், பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள இளைஞர்களிடம் 500 ரூபாய் வரை அதிக விலைக்கு விற்று இந்த கும்பல் கொள்ளை லாபம் சம்பாதித்து வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட 4 பேரும் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்படி புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இளைஞர்களின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் போதை மாத்திரை கும்பலை சாதுரியமாகப் பிடித்த போலீசாரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
சோழவரத்தில் துணிகர கொள்ளை – பூட்டிய வீட்டை உடைத்து 35 சவரன் நகை திருட்டு!
