Homeசெய்திகள்சென்னைமாநிலப் பல்கலைக்கழகங்களுக்கு முதலமைச்சரே வேந்தர்!” – தமிழக அரசின் நிலைப்பாட்டை உறுதி செய்த அமைச்சர் விஸ்வநாதன்;...

மாநிலப் பல்கலைக்கழகங்களுக்கு முதலமைச்சரே வேந்தர்!” – தமிழக அரசின் நிலைப்பாட்டை உறுதி செய்த அமைச்சர் விஸ்வநாதன்; துணைவேந்தர் தேடுதல் குழு 5 பேராக மாற்றம்!

-

- Advertisement -

மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு மாநில முதலமைச்சரே வேந்தராகச் செயல்பட வேண்டும் என்பதே தமிழக அரசின் உறுதியான நிலைப்பாடு என்றும், துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழு விரைவில் 5 பேர் கொண்ட குழுவாக மாற்றியமைக்கப்படும் என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் விஸ்வநாதன்

we-r-hiring

​சென்னை தரமணியில் உள்ள டாக்டர் தர்மாம்பாள் அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். கல்லூரி வளாகத்தில் மாணவிகளுக்கான உணவுத் தரம், சுத்தமான குடிநீர், கழிப்பறை வசதிகள், கட்டிடத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் விளையாட்டு மைதானம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்துப் பார்வையிட்ட பின், அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:

​3 பேர் கொண்ட தேடுதல் குழு 5 பேராக மாறுகிறது:
​”பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் நேற்று விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கடந்த காலங்களில் துணைவேந்தர் தேடுதல் குழுவில் ஆளுநரின் பிரதிநிதி, சிண்டிகேட் பிரதிநிதி மற்றும் அரசுப் பிரதிநிதி என 3 பேர் மட்டுமே இருந்தனர். ஆனால், முந்தைய ஆளுநர் ஆர்.என்.ரவி, பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) பிரதிநிதி ஒருவரை இதில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனால் தமிழக அரசு தரப்பிலும் கூடுதல் பிரதிநிதியைச் சேர்க்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

​எனவே, மூன்று பேர் கொண்ட துணைவேந்தர் தேடுதல் குழு, விரைவில் 5 பேர் கொண்ட குழுவாக மாற்றியமைக்கப்படும். இந்த 5 பேர் குழு அமைக்கப்பட்டவுடன் காலியாக உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் விரைவாகத் துணைவேந்தர்கள் நியமிக்கப்படுவார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, மாநில பல்கலைக்கழகங்களுக்கு மாநில முதலமைச்சரே வேந்தராக (Chancellor) செயல்பட வேண்டும் என்பதே தமிழக அரசின் கோரிக்கையும், உறுதியான நிலைப்பாடும் ஆகும்.

TRB தேர்வு புகார்களுக்குப் பின்னே நேர்காணல்:
​அரசு கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்களை நியமிப்பதற்கான ஆசிரியர் தேர்வு வாரிய (TRB) தேர்வை சுமார் 42,000 பேர் எழுதியுள்ளனர். இதில் 2,700 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இத்தேர்வின் விடைத்தாள் மதிப்பீட்டில் சிலருக்கு ‘பூஜ்ஜியம்’ மதிப்பெண் வந்திருப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக உயர்கல்வித்துறை அதிகாரிகளுடன் விவாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகார்கள் முழுமையாகச் சரிசெய்யப்பட்டு, குளறுபடிகள் நீக்கப்பட்ட பின்னரே அடுத்தகட்டமான நேர்காணல் (Interview) நடைபெறும். அதேபோல, 90 அரசு கலைக் கல்லூரிகளுக்கு முதல்வர்கள் (Principals) நியமிக்கும் பணியும் விரைவில் நடைபெறும். தற்போது சுமார் 8,000 கவுரவ விரிவுரையாளர்கள் பணியில் உள்ளனர்.

​பாலிடெக்னிக் படிப்புக்குக் குவியும் வரவேற்பு:
​பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 100 சதவீத வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போதைய ஆய்வில், தர்மாம்பாள் பாலிடெக்னிக் கல்லூரியில் படிப்பை முடித்து வெளியேறும் 140 மாணவிகளுக்கும் 100 சதவீதம் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தி தெரியவந்துள்ளது. சிவில், ஐடி உள்ளிட்ட துறைகளில் முன்னணி நிறுவனங்கள் பிளேஸ்மென்ட் (Placement) வழங்கியுள்ளன. முன்பெல்லாம் பொறியியல் படிப்புகளுக்கு இருந்த வரவேற்பைப் போலவே, தற்போது பாலிடெக்னிக் படிப்புகளுக்கும் மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.

மேலும், இக்கல்லூரி வளாகத்தில் காலியாக உள்ள இடங்களில், நல்ல காற்றோட்ட வசதி, தங்கும் விடுதி (Hostel) மற்றும் ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய மிகச்சிறந்த நவீன விளையாட்டு மைதானம் (Synthetic Stadium) விளையாட்டுத் துறையுடன் இணைந்து விரைவில் அமைக்கப்படும்” என்று அமைச்சர் விஸ்வநாதன் குறிப்பிட்டார்.

MUST READ