பல்வேறு கடுமையான விதிமுறைகள் மற்றும் பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்ட கடினமான கேள்விகளுடன் நடத்தப்பட்ட ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வால், பல ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என்று தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இ விவகாரத்தில் முதலமைச்சர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தலையிட்டு தேசிய அளவில் தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.


சிறப்பு அவசரக் கூட்டம்:
சென்னை பெருங்களத்தூரில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில அளவிலான சிறப்பு அவசரக் கூட்டம், அதன் தலைவர் கு.தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆசிரியர்களின் தற்போதைய நிலவரங்கள் மற்றும் அண்மையில் நடைபெற்ற தகுதித் தேர்வு குளறுபடிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
தனிப்பாட ஆசிரியர்களுக்கு நேர்ந்த சிரமம்:
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் தலைவர் கு.தியாகராஜன் தெரிவித்ததாவது:
”கடந்த 4 மற்றும் 5-ஆம் தேதிகளில் தமிழகத்தில் நடைபெற்ற ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வை, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மிகக் கடுமையான முறையில் நடத்தியுள்ளது. 2011-ஆம் ஆண்டிற்கு முன்பாகப் பணியில் சேர்ந்த பல்வேறு அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் இந்தத் தேர்வை எதிர்கொண்டனர்.
ஆனால், இத்தேர்வில் குறிப்பிட்ட பாடத்திட்டத்தைத் தாண்டி, பொதுவான பாடப்பிரிவுகளில் இருந்து கடினமான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. கடந்த பல ஆண்டுகளாகத் தங்களின் குறிப்பிட்ட தனிப் பாடங்களை (Special Subject) மட்டுமே நடத்தி வரும் ஆசிரியர்கள், இந்தத் தேர்வில் பொதுவான மற்றும் பிற பாடக் கேள்விகளை எதிர்கொண்ட போது கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.”
மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் அபாயம்:
”இந்தத் தேர்விற்காக ஆசிரியர்கள் பிரத்யேகமாகத் தயாராக வேண்டும் என்றால், அவர்கள் நீண்ட நாள்கள் விடுமுறை எடுத்துப் படிக்க வேண்டிய நிலை ஏற்படும். அப்படி ஆசிரியர்கள் விடுமுறை எடுத்தால், அது மாணவர்களின் கல்வியைத்தான் நேரடியாகப் பாதிக்கும்.
எனவே, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆகியோர் உடனடியாக இப்பிரச்சினையில் முன்வந்து, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் பேசி தேசிய அளவில் இதற்கு ஒரு முறையான தீர்வை ஏற்படுத்த வேண்டும்” என்று கு.தியாகராஜன் கேட்டுக்கொண்டார்.
சங்கத்தின் முக்கியக் கோரிக்கைகள்:
மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் செயல்படுத்துவது போல, தனிப்பாடப் பிரிவு ஆசிரியர்களின் பணி அனுபவம், செயல்பாடுகள் மற்றும் கல்வித் தகுதி ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு சிறப்பு கூடுதல் மதிப்பெண்கள் (Weightage Marks) வழங்கப்பட வேண்டும்.
தற்போது நடந்து முடிந்துள்ள தேர்வு முடிவுகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும்.
தேர்வில் கேட்கப்பட்ட தவறான கேள்விகளுக்கு உரிய மதிப்பெண்களை (Grace Marks) வழங்கி, அதன் பின்னரே தேர்வு முடிவுகளை முறையாக அறிவிக்க வேண்டும்.
சமூக வலைத்தளப் பதிவுகள் குறித்து அதிருப்தி:
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கீர்த்தனா பள்ளிகளில் ஆய்வு செய்வது குறித்துப் பேசிய அவர், “அமைச்சருக்குப் பள்ளிகளில் ஆய்வு நடத்த முழு உரிமை உள்ளது. ஆனால், ஆய்வின் போது ஒரு மாணவர் அளிக்கும் பதிலைச் சமூக வலைத்தளங்களில் பரவும் விதமாக வெளியிடுவது தவறானது.
சமுக வலைத்தளப் பதிவர்களும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் முகத்தை மறைத்தே இத்தகைய காணொளிகளையோ அல்லது பதிவுகளையோ வெளியிட வேண்டும்” என்று தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத் தலைவர் கு.தியாகராஜன் வலியுறுத்தினார்.
