டாஸ்மாக் பணியாளர்களின் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட 23 ஆண்டுகால கோரிக்கைகளை ஆய்வு செய்யத் தென்னிந்திய மாநிலங்களில் உயர்மட்டக் குழு ஆய்வு நடத்தும் என்றும், காலி பாட்டில்கள் விவகாரத்தில் சட்டமன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் என்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.


தொழிற்சங்கங்களின் அதிருப்தியும் அவசரக் கூட்டமும்:
கடந்த ஜூலை 7-ஆம் தேதி மாலை, டாஸ்மாக் பணியாளர்களின் ஊதியம் 25 சதவீதம் உயர்த்தப்படும் என்றும், இ.எஸ்.ஐ (ESI) திட்டம் அமல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் விக்னேஷ் அறிவித்திருந்தார். ஆனால், தங்களின் முக்கியக் கோரிக்கைகளான பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் போன்றவற்றை அறிவிக்காமல், இந்த பகுதி ஊதிய உயர்வு மட்டும் அறிவிக்கப்பட்டதற்கு டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் கடும் அதிருப்தி வெளியிட்டன.
இதனைத் தொடர்ந்து, உளவுப் பிரிவின் (Intelligence Wing) எச்சரிக்கையை அடுத்து, சென்னை தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை 6.45 மணி முதல் இரவு 9.40 மணி வரை உயர்மட்டப் பேச்சுவார்த்தைக் கூட்டம் நடைபெற்றது. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ், டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் (MD) மற்றும் அனைத்து டாஸ்மாக் தொழிற்சங்க நிர்வாகிகள் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர்.
அமைச்சர் விக்னேஷ் அளித்த அதிரடி வாக்குறுதிகள்:
1. பிற மாநிலங்களில் ஆய்வு – உயர்மட்டக் குழு:
கூட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள், “23 ஆண்டுகளாகப் பணி நிரந்தரம் இல்லாமல் தவிக்கும் ஊழியர்களின் வாழ்வாதாரத்தை அரசு காக்க வேண்டும்” என வலியுறுத்தினர். அதற்குப் பதிலளித்த அமைச்சர், “புதிய த.வெ.க. அரசு பொறுப்பேற்ற 60 நாட்களுக்குள் முதன்முறையாக 25% ஊதிய உயர்வு வழங்கியுள்ளது. எனினும், உங்களின் 23 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்ற, தமிழக முதல்வரின் ஆணைப்படி விரைவில் ஒரு உயர்மட்டக் குழு அமைக்கப்படும். இக்குழு கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் உள்ள மதுவிலக்குத் துறை செயல்பாடுகள், பணியாளர்களின் பணிநிலை குறித்து நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும். அதன் அடிப்படையில் சாதகமான நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்தார்.
2. மின் கட்டணம், கடை வாடகையை அரசே ஏற்கும்:
டாஸ்மாக் கிடங்குகள், அலுவலகங்கள் மற்றும் மதுபானக் கடைகளுக்கான மின்சாரக் கட்டணத்தை இனி மின்சாரத் துறையுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி டாஸ்மாக் தலைமை அலுவலகமே நேரடியாகச் செலுத்தும். மேலும், கடைகளின் வாடகை உயர்த்தப்பட்டு, அதனை நிர்வாகமே ஏற்கும் என்பதால் பணியாளர்கள் தங்கள் கையில் இருந்து கடை வாடகை தரத் தேவையில்லை.
3. இறக்கு கூலி கிடையாது – ஒப்பந்தம் ரத்து எச்சரிக்கை:
மதுபானப் பெட்டிகளைக் கடைகளுக்குள் இறக்கி வைப்பதற்கான சுமைப் பணியாளர் கூலியை (இறக்கு கூலி) கடைப் பணியாளர்கள் தர வேண்டியதில்லை. இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள ஒப்பந்ததாரர்கள் கூட்டத்தில், இந்தக் கூலியை ஒப்பந்ததாரர்களே வழங்க வேண்டும் என உத்தரவிடப்படும். தவறும்பட்சத்தில் அவர்களின் ஒப்பந்தம் உடனடியாக ரத்து செய்யப்படும்.
4. பாட்டில் சர்ச்சை முடிவுக்கும் வரும் – சட்டத்திருத்தம்:
தற்போது காலி பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்திற்காகப் பாட்டில்கள் மீது தனியாக ரூ.10 ஸ்டிக்கர் ஒட்டப்படுவதால், வாடிக்கையாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையே எம்.ஆர்.பி (MRP) விலை விவகாரத்தில் கடும் சர்ச்சை ஏற்படுகிறது. மேலும் ஊழியர்களுக்கும் பணிச்சுமை கூடுகிறது.
இதனைத் தவிர்க்க, வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் ‘சட்டத்திருத்தம்’ கொண்டு வரப்படவுள்ளது. இதன் மூலம், இனி மதுபான உற்பத்தி நிறுவனங்களே பாட்டிலின் லேபிளிலேயே ‘எம்.ஆர்.பி விலை + காலி பாட்டில் திரும்பப் பெற ரூ.10’ என அச்சிட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் ஸ்டிக்கர் ஒட்டும் பணிச்சுமையும், விலைத் தகராறும் முற்றிலுமாக நீங்கும். காலி பாட்டில்களைப் பெறத் தனி ஏஜென்சியும் விரைவில் அமைக்கப்படவுள்ளது.
”கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை”:
“இந்த புதிய த.வெ.க அரசு பொறுப்பேற்ற வெறும் 2 மாதங்களுக்குள் ஊழியர்களுக்காக இவ்வளவு தூரம் இறங்கி வந்து பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. எனவே, அரசின் மீது நம்பிக்கை வைத்து ஊழியர்கள் பொறுப்புடன் பணியாற்ற வேண்டும். எக்காரணம் கொண்டும் மதுபானங்களை எம்.ஆர்.பி விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக் கூடாது; மீறினால் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை பாயும்” என்று அமைச்சர் விக்னேஷ் கண்டிப்பாக எச்சரித்துள்ளார். அமைச்சரின் இந்த விரிவான விளக்கங்களைத் தொடர்ந்து தொழிற்சங்கங்களின் கூட்டம் சுமுகமாக நிறைவு பெற்றது.
