Homeசெய்திகள்மாவட்டம்வறண்ட மேட்டூர், புதர் மண்டிய வாய்க்கால்கள்: சீர்காழியில் 1 லட்சம் ஏக்கர் சம்பா சாகுபடிக்கு ஆபத்து!

வறண்ட மேட்டூர், புதர் மண்டிய வாய்க்கால்கள்: சீர்காழியில் 1 லட்சம் ஏக்கர் சம்பா சாகுபடிக்கு ஆபத்து!

-

- Advertisement -

காவிரி டெல்டாவின் கடைமடைப் பகுதியான மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் கொள்ளிடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில், மேட்டூர் அணை திறக்கப்படாததாலும், பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்படாததாலும் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் சம்பா நெற்பயிர் சாகுபடி கேள்விக்குறியாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள கடைமடை விவசாயிகள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
​இந்த விவசாயப் பேரவலத்தின் விரிவான விபரம் வருமாறு:
மேட்டூர்

ஜூலை கடந்தும் திறக்கப்படாத மேட்டூர்: கவலையில் விவசாயிகள்
​சீர்காழி மற்றும் கொள்ளிடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிரதானத் தொழிலாக விவசாயமே இருந்து வருகிறது. இப்பகுதிகளில் ஆண்டுதோறும் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா நெற்பயிர் விவசாயம் செய்யப்படுவது வழக்கம். வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ஆம் தேதி குறுவை மற்றும் சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும்.

we-r-hiring

ஆனால், நடப்பு ஆண்டில் போதிய நீர் இருப்பு இல்லாததால் ஜூன் 12-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படவில்லை. தற்போது ஜூலை மாதமும் பாதியை நெருங்கிவிட்ட நிலையிலும் தண்ணீர் வராததால், விவசாயப் பணிகளைத் தொடங்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இதன்பின்னர் வடகிழக்குப் பருவமழைக் காலம் தொடங்கிவிடும் என்பதால், காலதாமதமாகச் செய்யப்படும் விவசாயம் மழையில் மூழ்கிப் பாழாகும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

காடாக மாறும் பாசன வாய்க்கால்கள் – வெள்ள அபாயம்!
​வழக்கமாக மே மாதத்திற்குள்ளாகவே ஆறுகள், வடிகால் வாய்க்கால்கள், கிளை வாய்க்கால்கள் என அனைத்தையும் அரசு தூர்வாரித் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். ஆனால், சீர்காழி மற்றும் கொள்ளிடம் பகுதிகளில் இதுவரை பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் செடி, கொடிகள் முளைத்துக் காடு போலப் புதர் மண்டிக் கிடக்கின்றன.

விவசாயிகளின் குற்றச்சாட்டு:
“இப்படியே புதர் மண்டிக் கிடந்தால், மேட்டூர் அணை திறக்கப்பட்டாலும் கடைமடைப் பகுதிக்குத் தண்ணீர் வந்து சேர்வதில் பெரும் சிக்கல் ஏற்படும். அதுமட்டுமன்றி, மழைக்காலத்தில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், தண்ணீர் வடிய வழியில்லாமல் ஒட்டுமொத்தப் பயிர்களும் நீரில் மூழ்கி அழியும் அபாயம் உள்ளது. எனவே, தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் ஆறு மற்றும் வடிவாய்க்கால்களைத் தூர்வார வேண்டும்” என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

“அமைச்சருக்கு விவசாயம் தெரியுமா?” – மாற்றுப் பயிர் யோசனைக்குக் கண்டனம்!
​இதற்கிடையே, தமிழக உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ராமன், டெல்டா விவசாயிகள் மாற்று விவசாயத்திற்கு மாற வேண்டும் எனக் கூறியிருப்பது கடைமடை விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் கூறுகையில்:
​”உணவுத்துறை அமைச்சருக்கு விவசாயத்தைப் பற்றி ஏதேனும் தெரியுமா தெரியாதா? இது கடலோரக் கடைமடைப் பகுதி. இங்கு நெல் விவசாயத்தை விட்டால் அடுத்தபடியாகக் கரும்பு மட்டும்தான் பயிரிட முடியும். வேறு எந்த மாற்றுப் பயிரும் இங்கு விளையாது.
​கரும்பு விவசாயம் செய்யலாம் என்றால், இப்பகுதியில் உள்ள சர்க்கரை ஆலை (பட்டவர்த்தி பகுதி) பல ஆண்டுகளாகச் சிதலமடைந்து சீரழிந்து கிடக்கிறது.

வெட்டிய கரும்பைக் கொள்முதல் செய்ய ஆள் இல்லாத போது, கரும்பு விவசாயத்தை எப்படி நம்பிச் செய்ய முடியும்? எங்களது யதார்த்தச் சூழல் தெரியாமல் அமைச்சர் பேசுவது எந்த விதத்தில் நியாயம்?” என வேதனையுடனும் ஆத்திரத்துடனும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
​கடைமடைப் பகுதியின் விவசாயத்தைக் காக்க, தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டுத் தூர்வாரும் பணிகளை முடுக்கிவிடுவதோடு, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் என்பதே ஒட்டுமொத்த டெல்டா மக்களின் கோரிக்கையாக உள்ளது.

MUST READ