ராபர்ட் போஷ் (Robert Bosch) உள்ளிட்ட முன்னணி பன்னாட்டு (MNC) நிறுவனங்களில் அதிக சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் ₹2 கோடிக்கும் மேல் மோசடி செய்த தனியார் நிறுவன உரிமையாளர்கள் இருவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.


வழக்கின் பின்னணி:
சென்னை பெருங்குடி பகுதியில் வசித்து வரும் பிரதீப்ராஜா (27) என்ற மென்பொருள் பொறியாளர், சென்னை மதுரவாயல் பகுதியில் ‘ஷாரா இன்ஃபோ டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட்’ (SHARAA INFO DEVELOPERS PRIVATE LTD) என்ற பெயரில் இயங்கி வந்த தனியார் நிறுவனத்தை அணுகியுள்ளார். அந்நிறுவனத்தை நடத்தி வந்த திருவண்ணாமலையைச் சேர்ந்த சிலம்பரசன் (35), சென்னை மதுரவாயலைச் சேர்ந்த பிரபு (41) மற்றும் அவர்களது கூட்டாளிகள், தங்களுக்குப் முன்னணி நிறுவனங்களில் நல்ல செல்வாக்கு இருப்பதாகக் கூறி பிரதீப்ராஜாவை நம்ப வைத்துள்ளனர்.
பிரபல பன்னாட்டு நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக அவர்கள் உறுதியளித்ததை நம்பி, கடந்த 2025-ஆம் ஆண்டில் பிரதீப்ராஜா ₹2,69,000 பணத்தை அவர்களிடம் கொடுத்துள்ளார்.
₹2 கோடி சுருட்டிய மோசடி கும்பல்:
பணத்தைப் பெற்றுக் கொண்ட சிலம்பரசன் மற்றும் பிரபு ஜோடி, பிரதீப்ராஜாவிற்கு வேலை வாங்கித் தராமலும், வாங்கிய பணத்தைத் திருப்பித் தராமலும் இழுத்தடித்து ஏமாற்றியுள்ளது. இதற்கிடையே, இதே பாணியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட வேலையற்ற இளைஞர்களை நம்ப வைத்து, சுமார் ₹2 கோடிக்கும் அதிகமான பணத்தைப் பெற்று இந்த கும்பல் மெகா மோசடியில் ஈடுபட்டது வெளிச்சத்திற்கு வந்தது.
பாதிக்கப்பட்ட பிரதீப்ராஜா இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்து, தங்களை ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், தங்களது பணத்தை மீட்டுத் தரவும் கோரியிருந்தார்.
தனிப்படை அமைத்து அதிரடி கைது:
இப்புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவின் வேலைவாய்ப்பு மோசடி புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் மோசடி நடைபெற்றது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, தலைமறைவாக இருந்த குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டது.
போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில், முக்கிய குற்றவாளியான சிலம்பரசன் திருவண்ணாமலையிலும், மற்றொரு குற்றவாளியான பிரபு மதுரவாயலிலும் வைத்து நேற்று அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர். அவரிடமிருந்து மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட 2 செல்போன்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கும்பல் இன்னும் எத்தனை நபர்களை ஏமாற்றியுள்ளது என்பது குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
