Homeசெய்திகள்மாவட்டம்போலீஸ் தனிப்படை அமைத்தும் பலனில்லை? திருச்சி பெண் கொலை வழக்கில் குற்றவாளிகளைப் பிடிக்கக் கோரி மக்கள்...

போலீஸ் தனிப்படை அமைத்தும் பலனில்லை? திருச்சி பெண் கொலை வழக்கில் குற்றவாளிகளைப் பிடிக்கக் கோரி மக்கள் திடீர் சாலை மறியல்!

-

- Advertisement -

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள சிறுகளப்பூர் கிராமத்தில், காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த இளம் பெண் ஒருவர், ஏரியின் நடுவே உள்ள மணல் திட்டில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கொலை நடந்து 10 நாட்களுக்கு மேலாகியும் குற்றவாளிகள் கைது செய்யப்படாததால், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.போலீஸ் தனிப்படை அமைத்தும் பலனில்லை? திருச்சி பெண் கொலை வழக்கில் குற்றவாளிகளைப் பிடிக்கக் கோரி மக்கள் திடீர் சாலை மறியல்!​இரவு நேரத்தில் நேர்ந்த கொடூரம்
​சிறுகளப்பூர் கிராமத்தின் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் நந்தகுமார். லாரி ஓட்டுநரான இவருடைய மனைவி செந்தமிழ்செல்வி (வயது 32). இவர் தினந்தோறும் இரவு நேரத்தில் வீட்டில் இருந்து சுமார் 600 மீட்டர் தொலைவில் உள்ள தனது ஆட்டுப்பட்டிக்குச் சென்றுவிட்டு, அருகில் உள்ள பெரிய ஏரிப் பகுதிக்கு இயற்கை உபாதை கழிக்கச் செல்வது வழக்கம். ​கடந்த ஜூன் 30-ஆம் தேதி இரவு சுமார் 10:00 மணி அளவில் வழக்கம் போல் ஆட்டுப்பட்டிக்குச் சென்று வருவதாகக் கூறிவிட்டுச் சென்ற செந்தமிழ்செல்வி, வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது கணவர் நந்தகுமார், ஆட்டுப்பட்டி மற்றும் ஏரிப் பகுதிகளில் தீவிரமாகத் தேடிப் பார்த்துள்ளார். எங்கு தேடியும் மனைவி கிடைக்காததால், அன்றைய தினமே இரவு 10:15 மணி அளவில் காணகிளியநல்லூர் காவல் நிலையத்திற்கு நந்தகுமார் தகவல் தெரிவித்துள்ளார்.

தீயணைப்புத் துறையினர் மற்றும் கிராம மக்கள் தீவிர தேடுதல்
​செந்தமிழ்செல்வி ஏரியில் தவறி விழுந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அடுத்த நாள் காலையில் கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் ஜே.சி.பி (JCB) இயந்திரத்தின் உதவியுடன் ஏரி மற்றும் அருகில் இருந்த நாணல் புதர்களில் தேடும் பணியில் ஈடுபட்டனர். தகவலறிந்து லால்குடி மற்றும் புள்ளம்பாடி தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, குளத்தில் இறங்கி தீவிரமாகத் தேடினர். ​இதற்கிடையில், பெரிய ஏரியின் கரைப்பகுதியில் காணாமல் போன செந்தமிழ்செல்வியின் அலைபேசி, செருப்பு மற்றும் துண்டு ஆகியவை கண்டெடுக்கப்பட்டன. இதனால் அவர் ஏதேனும் ஆபத்தில் சிக்கியிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்தது.

we-r-hiring

​மணல் திட்டில் நிர்வாண நிலையில் சடலம் மீட்பு
​சம்பவ இடத்திற்கு லால்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜ்மோகன், தடயவியல் அறிவியல் குழுவினர் மற்றும் மோப்ப நாய் பிரிவினர் விரைந்து வந்து முதற்கட்ட விசாரணையைத் தொடங்கினர். மோப்ப நாய் ஏரிக்கரையில் இருந்து ஆட்டுப்பட்டிக்கும், அங்கிருந்து செந்தமிழ்செல்வியின் வீட்டிற்கும் சென்று நின்றதே தவிர, வேறு யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. ​இந்த நிலையில், மதிய வேளையில் பெரிய ஏரியின் நடுவே உள்ள மணல் திட்டில் செந்தமிழ்செல்வி ஆடைகளின்றி, நிர்வாண நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவரது கை, கால்கள் கட்டப்பட்டிருந்தன. மேலும், அவரது கை, முகம், புருவம், மூக்கின் அருகில் பலத்த காயங்களும், இடுப்பின் பின்புறத்தில் அடிபட்டு இரத்தக் காயங்களும் இருந்தன. மர்ம நபர்களால் அவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. ​தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் செந்தமிழ்செல்வியின் உடலை மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

​தேசிய நெடுஞ்சாலையில் 1,000-க்கும் மேற்பட்டோர் முற்றுகை
​தகவலறிந்து சம்பவ இடத்திற்கு நேரில் வந்த திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஏரிப் பகுதியை பார்வையிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டார். குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில், ஏ.டி.எஸ்.பி (ADSP) தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ​இருப்பினும், கொலை நடந்து பத்து நாட்களுக்கு மேலாகியும் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை எனத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிறுகளப்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் திரண்டு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ​அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சாலை மறியலால் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டு, வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நீடித்து வருகிறது.

விதியை மீறி கனிம வளக் கொள்ளை: சோழவந்தான் MLA ஆதரவாளர்கள் மீது அலங்காநல்லூர் விவசாயிகள் பகிரங்க குற்றச்சாட்டு!

MUST READ