கச்சா எண்ணெய் தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் விலை உயர்வே காரணம்.. பலகாரங்களின் விலையும் அதிகரிப்பு; உணவகங்களிலும் விலை உயர வாய்ப்பு.. எடையைக் குறைத்து நூதன முறையில் ஏமாற்றும் சோப்பு நிறுவனங்கள்..


தமிழ்நாட்டில் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் சோப் வகைகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால், பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்தும் ஏழை மற்றும் நடுத்தர குடும்ப மக்கள் கடும் கலக்கமடைந்துள்ளனர்.
மத்திய கிழக்காசிய நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு, கடந்த இரண்டு மாதங்களாக சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோலிய எரிபொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, நாடு முழுவதும் உணவுப் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் விலையும் ஏறுமுகமாகவே உள்ளது.
அரிசி, மளிகைப் பொருட்கள் விலை உயர்வு:
பெட்ரோல், டீசல் விலை உயர்வை காரணம் காட்டி பெரும்பாலான டீக்கடைகளில் வடை, போண்டா, சமோசா போன்ற சிற்றுண்டிகளின் விலை 2 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல், சந்தையில் 26 கிலோ எடை கொண்ட ஒரு சிப்பம் அரிசி (ரகத்திற்கு ஏற்ப) 200 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. 50 கிலோ எடை கொண்ட உளுந்து மூட்டை ஒன்றுக்கு 250 ரூபாய் உயர்ந்துள்ள நிலையில், சில்லரை விற்பனையில் கிலோவுக்கு 8 முதல் 15 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இது மட்டுமன்றி, சர்க்கரை கிலோவுக்கு 5 ரூபாயும், துவரம்பருப்பு கிலோவுக்கு 5 முதல் 20 ரூபாய் வரையும், கொத்தமல்லி கிலோவுக்கு 70 ரூபாய் வரையும் உயர்ந்து நுகர்வோரை அதிர வைத்துள்ளது.
வியாபாரிகள் மற்றும் இல்லத்தரசிகள் தரப்பு கருத்து:
”கடும் வறட்சியின் காரணமாக வரத்து குறைந்துள்ளதால் காய்கறிகளின் விலையும் கனிசமாக உயர்ந்து வருகிறது. வடமாநிலங்களில் இருந்து இறக்குமதியாகும் பெல்லாரி வெங்காயம் கிலோவுக்கு 10 ரூபாயும், பூண்டு கிலோவுக்கு 40 முதல் 60 ரூபாய் வரையிலும் விலை ஏறியுள்ளது.”
— வியாபாரிகள் குமார் (பெல்லாரி), திருவேங்கடம் (பூண்டு)
”அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு வணிக ரீதியாக வியாபாரிகளுக்கு பாதிப்பை தந்தபோதிலும், பட்ஜெட் போட்டு குடும்பத்தை நடத்தும் எங்களைப் போன்ற ஏழை, நடுத்தர இல்லத்தரசிகளையே இது பெரிதும் வதைக்கிறது.”
— மகாலெட்சுமி, இல்லத்தரசி, எளம்பலூர்
சோப்பு நிறுவனங்களின் நூதன நூதன ஏமாற்று:
மளிகைப் பொருட்கள் ஒருபுறமிருக்க, அனைத்து வகை சலவை சோப்புகள் மற்றும் பவுடர்களின் விலை 20% வரையிலும், குளியல் சோப்புகளின் விலை 10% வரையிலும் எகிறியுள்ளது. இதில் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், ஒரு சில முன்னணி சோப்பு நிறுவனங்கள் விலையை உயர்த்தாமல், சலவை சோப்புகளின் எடையை 10 கிராம் முதல் 30 கிராம் வரை குறைத்து நூதன முறையில் விற்பனை செய்கின்றன. இத்தகைய மறைமுக விலை உயர்வு சாமானிய நுகர்வோருக்குத் தெரிவதில்லை.
சோப்பு தயாரிப்புக்கான கச்சா எண்ணெய் சார்ந்த மூலப்பொருட்களின் விலை உயர்வு, எரிபொருள் ஏற்றத்தால் அதிகரித்துள்ள போக்குவரத்து மற்றும் காப்பீட்டுச் செலவு ஆகியவையே இந்த விலை உயர்வுக்குக் காரணம் என சோப்பு தயாரிப்பு நிறுவனங்கள் தரப்பில் கூறப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஹோட்டல் உணவுகள் விலை உயர வாய்ப்பு:
அதிகரித்து வரும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக, நுகர்வோர் மட்டுமின்றி உணவக உரிமையாளர்களும் தவித்து வருகின்றனர். இதனால் விரைவில் உணவகங்களில் (ஹோட்டல்களில்) உணவு வகைகளின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் என உணவக உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
