தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே காட்டலங்குளத்தில் நடைபெற்ற மாவீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழாவில், திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்.பி.யின் வாகனம் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோனின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, காட்டலங்குளத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக கனிமொழி கருணாநிதி எம்.பி. இன்று வருகை தந்தார். அப்போது, பாதுகாப்பு காரணங்களைக் காட்டி அவரது வாகனத்தை நினைவிடப் பகுதிக்குள் செல்ல விடாமல் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனைத் தொடர்ந்து, கனிமொழி எம்.பி. மற்றும் அவருடன் வந்த திமுக நிர்வாகிகள் காவல்துறையினரிடம் நீண்ட நேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். எனினும், வாகனத்தை உள்ளே அனுமதிக்க காவல்துறையினர் மறுத்துவிட்டனர்.
காவல்துறையினரின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, கனிமொழி எம்.பி. தனது வாகனத்தில் இருந்து உடனடியாக கீழே இறங்கினார். அங்கிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வெயிலையும் பொருட்படுத்தாமல் தொண்டர்களுடன் நடந்து சென்ற அவர், மாவீரன் அழகுமுத்துக்கோனின் சிலைக்கு மலர் மாலை அணிவித்துத் தனது மரியாதையைச் செலுத்தினார். நாடாளுமன்றக் குழுத் தலைவரின் வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டு, அவர் நடந்து சென்று மரியாதை செலுத்திய இச்சம்பவம் அப்பகுதியில் தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

