அனைத்து அரசு நிகழ்வுகளிலும் ‘வந்தே மாதரம்’ பாடலை முழுமையாகப் பாட வேண்டும் என்று ஒன்றிய அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கை, இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள மத சுதந்திரத்திற்கும் பன்முகத்தன்மைக்கும் எதிரானது என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். மேலும், இந்த சுற்றறிக்கையை ஒன்றிய உள்துறை அமைச்சகம் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சுற்றறிக்கையின் பின்னணி
ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள புதிய சுற்றறிக்கையின்படி, இந்திய நாட்டைப் பத்துக் கரங்களைக் கொண்ட துர்கையாகவும், தாமரை மலரில் உறையும் லட்சுமியாகவும், அறிவைத் தரும் சரஸ்வதியாகவுக் உருவகித்து எழுதப்பட்ட ‘வந்தே மாதரம்’ பாடலை, அனைத்து அரசு விழாக்களிலும் எவ்வித வரிகளையும் நீக்காமல், அனைவரும் 3 நிமிடம் 10 வினாடிகள் கட்டாயமாகப் பாட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
பன்முகத்தன்மைக்கு எதிரான ஒற்றை மத அடையாளம்

இந்த அறிவிப்பு குறித்து எம்பி சு. வெங்கடேசன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:
”இந்திய நாட்டை இந்து மதக் கடவுள்களாக உருவகித்து எழுதப்பட்ட ‘வந்தே மாதரம்’ பாடலைக் கட்டாயமாக்குவது என்பது, அப்பட்டமான இந்து ராஷ்டிர அரசியலின் அதிகாரப்பூர்வ முன்னெடுப்பாகும்.
பஞ்சாப், சிந்து, குஜராத், மராட்டியம், திராவிடம், ஒடிசா, வங்காளம் ஆகிய தேசிய இனங்களையும், விந்திய-இமய மலைகளையும், யமுனை-கங்கை நதிகளையும் உள்ளடக்கிய இந்தியாவின் பன்முக அடையாளத்தைப் போற்றும் நமது ‘தேசிய கீதம்’ இதன் மூலம் இரண்டாம்பட்சமாக்கப்பட்டுள்ளது. அதேபோல, மாநில வணக்கம் மற்றும் மொழி வணக்கப் பாடல்கள் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன.”
மேலும், இந்த சுற்றறிக்கையின் மூலம் ஒற்றை இந்து மத அடையாளமே முதன்மையானது என்றும், இந்தியாவின் பன்முக அடையாளமும் மொழி அடையாளங்களும் அதற்கு அடுத்தபடியே என்றும் ஒன்றிய அரசு அறுதியிட்டுச் சொல்வதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதில் பிற மத அடையாளங்களுக்கு எந்தவித இடமும் அளிக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுற்றறிக்கையைத் திரும்பப் பெற கோரிக்கை
இந்திய அரசியல் சாசனம் குடிமக்களுக்கு வழங்கியுள்ள மத சுதந்திரம், தனிமனித உரிமை மற்றும் இந்தியாவின் பன்முகப் பாரம்பரியம் ஆகிய அனைத்திற்கும் எதிராக அமைந்துள்ள இந்தச் சுற்றறிக்கையை ஒன்றிய உள்துறை அமைச்சகம் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.
