காவிரி டெல்டா ஆற்றுப் படுகைகளில் முடங்கிக் கிடந்த மணல் குவாரிகளை மீண்டும் திறக்க அரசு திட்டமிட்டுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல், ஒட்டுமொத்த டெல்டா விவசாயிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நிலத்தடி நீர்மட்டம் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதால், இந்த முடிவை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் எனப் போராட்டக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. 
அமலாக்கத்துறை நடவடிக்கைக்குப் பின் மீண்டும் திறப்பு?
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, மணல் குவாரிகளில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக அமலாக்கத்துறை (ED) நடத்திய அதிரடி சோதனைகள் மற்றும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து, டெல்டா பகுதியில் இருந்த முக்கிய மணல் குவாரிகள் அனைத்தும் மூடப்பட்டன. இந்நிலையில், தற்போது புதிய அரசு பொறுப்பேற்றுள்ள சூழலில், கடந்த 3 ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் 12 மணல் குவாரிகளை மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டு வர தீவிர ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

500 முதல் 600 கி.மீ தூரத்திற்கு மணல் எடுக்கத் திட்டம்
பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை வட்டாரங்களில் இருந்து கசிந்துள்ள தகவல்களின்படி, காவிரி மற்றும் அதன் கிளை ஆற்றுப் படுகைகளில் குறிப்பிட்ட பகுதிகள் மட்டுமின்றி, சுமார் 500 முதல் 600 கிலோமீட்டர் தூரத்திற்கு மணல் அள்ளுவதற்கான திட்டவரைவு தயார் செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான மணல் தட்டுப்பாட்டைப் போக்கவும், அரசுக்கான வருவாயை ஈட்டவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்படுகிறது.
“டெல்டாவை பாலைவனமாக்காதீர்!” – விவசாயிகள் கண்ணீர் மல்கக் கோரிக்கை
இதுகுறித்து டெல்டா விவசாயிகள் கூட்டமைப்பினர் கூறுகையில், “ஏற்கனவே டெல்டா மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்குச் சென்றுவிட்டது. இந்தச் சூழலில் மீண்டும் 12 இடங்களில் பிரம்மாண்ட குவாரிகளைத் திறந்து, நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரத்திற்கு மணலை அள்ளினால் விவசாயமே முற்றிலும் அழிந்துவிடும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்து அரசு மணல் கொள்ளைக்கு வழிவகுக்கக் கூடாது” என மிகுந்த கவலையுடன் தெரிவித்துள்ளனர். கட்டுமானத் தேவைகளுக்காகச் சூழலியலை பலிகொடுக்கக் கூடாது என்றும், இந்த முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் டெல்டா மாவட்டங்களில் மீண்டும் ஒரு பெரிய அளவிலான சுற்றுச்சூழல் போராட்டம் வெடிப்பதற்கான சூழல் உருவாகியுள்ளது.
