Homeசெய்திகள்இந்தியா9-ம் வகுப்பில் 3-வது மொழியை அறிமுகப்படுத்துவது மாணவர்களுக்குத் தேவையற்ற மன அழுத்தம்!" - உச்சநீதிமன்ற நீதிபதி...

9-ம் வகுப்பில் 3-வது மொழியை அறிமுகப்படுத்துவது மாணவர்களுக்குத் தேவையற்ற மன அழுத்தம்!” – உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்னா கவலை

-

- Advertisement -

9-ம் வகுப்பில் மூன்றாவது மொழியைப் புதியதாக அறிமுகப்படுத்துவது, பொதுத் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்குத் தேவையற்ற மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்னா கவலை தெரிவித்துள்ளார்.

நாகரத்னா

we-r-hiring

​தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜவஹர் நவோதயா பள்ளிகளை நிறுவுவதற்குத் தேவையான வழிவகைகளைச் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராகத் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மனு இன்று உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்னா அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

“6-ம் வகுப்பிலேயே தொடங்குவதுதான் சரி” – நீதிபதி அறிவுறுத்தல்

​வழக்கு விசாரணையின் போது, தமிழக அரசு தரப்பில் மூன்றாவது மொழிக் கொள்கை தொடர்பாக ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டன. அதற்குப் பதிலளித்த நீதிபதி நாகரத்னா, “மூன்றாவது மொழி என்றால் அது கட்டாயம் இந்திதான் என்று அர்த்தமல்ல; மாநில மொழி, ஆங்கிலம் மற்றும் மாணவர்கள் விரும்பும் ஏதேனும் ஒரு மூன்றாவது மொழியைக் கற்பிக்கலாம்” என்று சுட்டிக்காட்டினார்.

​தொடர்ந்து பேசிய அவர், மாணவர்களின் கல்விச் சுமை குறித்துப் பின்வருமாறு குறிப்பிட்டார்: “10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தயாரிப்புகள் மாணவர்கள் 8-ம் வகுப்பு படிக்கும் போதே தொடங்கிவிடுகின்றன. சிபிஎஸ்இ (CBSE), ஐசிஎஸ்இ (ICSE) அல்லது மாநிலப் பாடத்திட்டம் எதுவாக இருந்தாலும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை முன்னிட்டு மாணவர்கள் ஏற்கனவே கடுமையான அழுத்தத்தில் இருப்பார்கள்.

இத்தகைய சூழலில், 9-ம் வகுப்பில் புதிய மொழியை அறிமுகப்படுத்துவது சரியான அணுகுமுறை அல்ல. மூன்றாவது மொழியைக் கற்பிக்க வேண்டுமெனில், அதை 9-ம் வகுப்பில் திணிக்காமல் 6-ம் வகுப்பிலேயே தொடங்குவதுதான் மாணவர்களுக்கு ஏற்றதாக இருக்கும்.”

​மேலும், தனது பள்ளிப் பருவ அனுபவத்தை நினைவுகூர்ந்த நீதிபதி நாகரத்னா, தாங்கள் படித்த காலத்தில் நடுநிலைப் பள்ளியிலேயே (6-ம் வகுப்பிலேயே) மூன்றாவது மொழி கற்பிக்கப்பட்டதாகவும், இதனால் மாணவர்கள் அதனை எவ்வித அழுத்தமும் இன்றி எளிதாகக் கற்றுக்கொள்ள முடிந்ததாகவும் தெரிவித்தார்.

மத்திய அரசு திட்டங்களை நிராகரிக்கக் கூடாது

​”மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்கள் என்பதற்காகவே அவற்றை மாநில அரசு நேரடியாக நிராகரிக்கக் கூடாது” என்று குறிப்பிட்ட நீதிமன்றம், தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை அமைப்பது தொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவித்தது.

MUST READ