இந்தியாவில் பெட்ரோலுடன் 20% எத்தனால் கலக்கும் (E20) மற்றும் 100% எத்தனால் (E100) பயன்பாட்டுத் திட்டத்தை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறார். இந்நிலையில், இந்த எத்தனால் கொள்கையால் அவரது மகனுக்குச் சொந்தமான நிறுவனங்கள் ரூ.500 கோடி வரை பெரும் லாபம் ஈட்டியுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு நிதின் கட்கரி காரசாரமாகப் பதிலளித்துள்ளார்.


ஏபிபி (ABP) செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், எத்தனால் விவகாரம் தொடர்பாகச் செய்தியாளர் மேகா பிரசாத் எழுப்பிய அடுக்கடுக்கான கேள்விகளும், அதற்கு அமைச்சர் அளித்த நேரடிப் பதில்களும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
செய்தியாளர் Vs நிதின் கட்கரி: நேருக்கு நேர் விவாதம்
பேட்டியின் போது செய்தியாளர் குறுக்கிட்டு, “உங்களது எத்தனால் கொள்கையின் காரணமாக உங்கள் மகனுக்குச் சொந்தமான நிறுவனங்கள் 500 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளதாகக் கூறப்படுகிறதே? இது எப்படி நடந்தது?” என்று நேரடியான கேள்வியை முன்வைத்தார். இதற்குச் சற்றும் சளைக்காமல் பதிலளித்த நிதின் கட்கரி: “இது முற்றிலும் தவறான மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்ட ஒரு குற்றச்சாட்டாகும்.
எத்தனால் வியாபாரத்தில் என் மகன்களின் நிறுவனங்களுக்கான பங்கு வெறும் 0.5 சதவீதத்திற்கும் குறைவுதான். மொத்தமுள்ள வியாபாரத்தில் மிகச் சிறிய அளவில்தான் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். உண்மையைச் சொல்லப் போனால், அந்த நிறுவனங்களுக்கு ரூ.1,600 கோடி அளவுக்குக் கடன்தான் உள்ளது. எனக்கு எதிராகத் திட்டமிட்டு ஒரு தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது.” என்று விளக்கமளித்தார்.
”எத்தனால் கொள்கை விவசாயிகளுக்கானது”
தொடர்ந்து எத்தனால் கலந்த பெட்ரோலால் (E20) வாகனங்களின் மைலேஜ் குறைவதாகவும், என்ஜின்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகவும் சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ள விமர்சனங்களுக்கும் அவர் பதிலடி கொடுத்தார். “மாருதி போன்ற முன்னணி கார் நிறுவனங்கள் கூட E20 பெட்ரோலால் என்ஜின் பாதிக்கப்படுவதாக இதுவரை கூறவில்லை.
இந்த எத்தனால் கொள்கை என்பது கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக இந்தியா ஆண்டுதோறும் செலவிடும் சுமார் ரூ.22 லட்சம் கோடியை மிச்சப்படுத்துவதற்கும், அந்தப் பணம் நேரடியாக இந்திய விவசாயிகளைச் சென்றடைய வேண்டும் என்பதற்குமே கொண்டுவரப்பட்டது. வாகனங்களுக்கு 100% எத்தனால் பயன்பாட்டைக் கொண்டுவருவதே என் லட்சியம். E20 எத்தனால் பெட்ரோல் வேண்டாம் என்பவர்கள், 100% தூய்மையான பெட்ரோலை அதிக விலை கொடுத்து வாங்கிக் கொள்ளட்டும்” என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
தற்போதைய அரசியல் சூழலில், மத்திய அரசின் பசுமை எரிபொருள் திட்டத்தின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளும், அதற்கு அமைச்சர் கட்கரி அளித்த இந்த அதிரடி விளக்கமும் தேசிய அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
