அரசாணையை உடனடியாக திரும்பப் பெற டிடிவி தினகரன் வலியுறுத்தல்!
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டிருக்கும் தேர்வு அட்டவணையை உடனடியாக திரும்பப் பெற்று, நடப்பு ஆண்டிலேயே காவலர் ஆட்சேர்ப்புக்கான நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

இளைஞர்கள் மத்தியில் கடும் ஏமாற்றம்
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2026-ஆம் ஆண்டுக்கான காவலர் ஆட்சேர்ப்பை, அடுத்த ஆண்டுக்கு (2027) தள்ளி வைத்திருப்பதாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பாணை, சீருடைப் பணியில் சேர வேண்டும் என்ற கனவோடு காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்கள் மத்தியில் கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசின் இந்த நடவடிக்கை அவர்களின் எதிர்காலத்தையே வீணாக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளது” என்று கவலை தெரிவித்துள்ளார்.
சட்டம் ஒழுங்கு சீர்குலையும் அபாயம்
மேலும் அந்த அறிக்கையில், “தமிழகத்தில் தற்போதைய சூழலில் கொலை, கொள்ளை, போதைப்பொருள் தாராளப் பழக்கம் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இவற்றை தடுத்து நிறுத்தி, சட்டம் ஒழுங்கைப் பேணிக் காக்க வேண்டிய பொறுப்புமிக்க துறையாக காவல்துறை திகழ்கிறது. அப்படிப்பட்ட முக்கியத் துறையில் நிலவும் காலிப்பணியிடங்களை நிரப்பாமல், ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளைத் தள்ளி வைப்பது மக்களின் உயிர் பாதுகாப்போடு விளையாடும் செயலாகும்” என டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
உடனடி நடவடிக்கை தேவை
எனவே, இளைஞர்களின் வேலைவாய்ப்பையும், பொதுமக்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, தள்ளிவைப்பு அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும். நடப்பு ஆண்டிலேயே காவலர் ஆட்சேர்ப்புப் பணிகளைத் தொடங்கிட அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.
மனிதநேயம் கொண்ட புதிய சமுதாயத்தை உருவாக்குவோம் – முதல்வர் விஜய்
