சென்னையை அடுத்த பல்லாவரத்தில், சக மாணவிகள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் உறவினப் பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாகச் சித்தரித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட 5-ஆம் ஆண்டு சட்ட மாணவரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
சென்னையை அடுத்த குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் காளிசரண் (23). இவர் பல்லாவரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 5-ஆம் ஆண்டு சட்டம் படித்து வருகிறார். இவர் தனது சக மாணவி ஒருவரின் புகைப்படத்தை கணினி/செயலி மூலம் ஆபாசப் படமாக மாற்றி (Morphing), அதனைச் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இதனால் பெரும் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, உடனடியாகப் பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

சைபர் கிரைம் விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மைகள்
புகாரைத் தொடர்ந்து, சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், இந்த விபரீத செயலில் ஈடுபட்டது சட்ட மாணவர் காளிசரண் என்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, இந்த வழக்கு சங்கர்நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு ஆய்வாளர் சித்ரா தலைமையிலான மகளிர் காவல்துறையினர் காளிசரணைக் கைது செய்து, அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது வெளிவந்த தகவல்கள் பெண் போலீசாரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
யாரையும் விட்டு வைக்காத கொடூரம்
காளிசரண் தான் படிக்கும் கல்லூரியின் சக மாணவிகள் மட்டுமின்றி, பாடம் நடத்தும் பெண் பேராசிரியர்கள், தனக்குத் தெரிந்த இளம் பெண்கள் மற்றும் தனது சொந்த உறவினர் பெண்களைக் கூட விட்டுவைக்காமல், அவர்களின் புகைப்படங்களையும் ஆபாசமாகச் சித்தரித்துச் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருப்பது விசாரணையில் அம்பலமானது.
புழல் சிறையில் அடைப்பு
கைது செய்யப்பட்ட காளிசரணுக்கு முறைப்படி மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதன்பின், அவரை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், நீதிமன்ற உத்தரவின்படி புழல் மத்திய சிறையில் அடைத்தனர். சட்டம் படித்துவிட்டு சமூகத்திற்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய மாணவர் ஒருவரே, பேராசிரியர்கள் மற்றும் மாணவிகளின் படங்களை ஆபாசமாகச் சித்தரித்துச் சிறைக்குச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சபரிவர்மன் கொலை வழக்கு: சிறைக் காவலர்களை வளைத்த தனிப்படை; சிசிடிவி ஆதாரங்களால் அதிரும் கோட்டை!
