மத்திய பாஜக அரசு நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை (Delimitation) உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை நிறைவேற்றத் திட்டமிட்டு வரும் சூழலில், திமுகவின் அரசியல் நகர்வுகள் மற்றும் காங்கிரஸ் தலைவர்களின் கருத்துகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் ஐயநாதன் பிரத்யேகப் பேட்டியளித்துள்ளார்.
வரைவு அறிக்கைக்காக காத்திருக்கும் திமுக
“பாஜக பக்கம் திமுக நகர்கிறதா?” என்ற கேள்விக்கு பதிலளித்த ஐயநாதன், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ‘வரைவு அறிக்கை (Draft) வந்தவுடன் முடிவெடுப்போம்’ எனக் கூறியதில் எந்தத் தவறும் இல்லை என்று சுட்டிக்காட்டினார்.

தென் மாநிலங்களின் அபாயம்
தொகுதி மறுவரையறை ஆணையத்தின் முதன்மை அளவுகோல் மக்கள் தொகை மட்டுமே என்பதால், மக்கள் தொகையைக் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்து பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
அமித் ஷாவின் வாக்குறுதியும் திமுகவின் நிலைப்பாடும்
‘மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைக்கப்படாது; 50% வரை தொகுதிகள் அதிகரிக்கப்படும்’ என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ள சூழலில், அந்த வாக்குறுதி அதிகாரப்பூர்வ வரைவு அறிக்கையில் இடம்பெறுகிறதா என்பதை ஆய்வு செய்த பிறகே திமுக தனது சட்டப் போராட்டத்தை முன்னெடுக்கும் என ஐயநாதன் விளக்கிச் சொன்னார்.
காங்கிரஸ் தலைவர்கள் மீது கடும் விமர்சனம்
காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு மற்றும் கார்த்தி சிதம்பரம் போன்ற தலைவர்களின் கருத்துகளைச் சாடிய ஐயநாதன் தெரிவித்ததாவது, “திமுக மீது சந்தேகம் கிளப்புவதே காங்கிரஸ்காரர்களின் வேலையாகிவிட்டது. கடந்த காலங்களில் தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதன்முதலில் குரல் கொடுத்துப் போராட்டத்தை வலுப்படுத்தியவர் மு.க. ஸ்டாலின். 2004-க்குப் பிறகு தமிழ்நாட்டின் உரிமைக்காக காங்கிரஸ் கட்சி எந்தப் போராட்டத்தையும் நடத்தவில்லை. தேர்தல் நேரத்தில் மட்டும் வந்து திமுகவிடம் சீட்டுகளுக்காக நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.”
மேலும், 2011 ஆம் ஆண்டு தேர்தலின் போதே காங்கிரஸுக்கு அதிக தொகுதிகளைக் கொடுத்து திமுக தவறு செய்ததாகவும், திமுகவின் உழைப்பையும் நிதியையும் பெற்றுக்கொண்டு, தற்போது அதே கட்சியின் கொள்கை உறுதி குறித்து காங்கிரஸார் கேள்வி எழுப்புவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் சாடினார்.
‘திமுக கொள்கை ரீதியான கட்சி’: பாஜக கூட்டணி வதந்தி மறுப்பு
திமுக பாஜகவுடன் மறைமுகமாகக் கைகோர்க்கிறது அல்லது மத்திய அமைச்சரவையில் சேரப்போகிறது என்ற வதந்திகளை முற்றிலுமாக மறுத்த அவர், திமுக என்பது கொள்கைப் பூர்வமாக இயங்கும் ஒரு மாநிலக் கட்சி. மாநில சுயாட்சி, தமிழ் மொழி மற்றும் மாநில உரிமைகளில் திமுக ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது. அவசரநிலைக் காலத்திலும் (Emergency) கூட மக்கள் நலனுக்காக ஆட்சியையே தியாகம் செய்த வரலாறு திமுகவுக்கு உண்டு என்பதை அவர் நினைவூட்டினார்.
நாடாளுமன்றக் கூட்டத்தொடரும் எதிர்க்கட்சிகளின் சவாலும்
நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பாஜக அரசு கொண்டுவரத் திட்டமிட்டுள்ள பிற மசோதாக்கள் குறித்துப் பேசுகையில், தொகுதி மறுவரையறை போன்ற மசோதாக்களுக்கு மூன்றில் இரண்டு பங்கு சிறப்பு பெரும்பான்மை (Special Majority) தேவை என்பதால் எதிர்க்கட்சிகளின் ஆதரவு அவசியமாகிறது. ஆனால், சாதாரண பெரும்பான்மையில் நிறைவேற்றப்படக்கூடிய பிற மசோதாக்களை அரசு எளிதாக நிறைவேற்றிவிடும் என்றும், அதனை மக்கள் எழுச்சியின் மூலமாக மட்டுமே எதிர்கொள்ள முடியும் என்று மூத்த பத்திரிகையாளர் ஐயநாதன் தெரிவித்துள்ளாா்.
