Homeசெய்திகள்ஆவடிஆடி கிருத்திகை: ஆவடி - திருத்தணி சிறப்பு பேருந்துகளை இயக்க பக்தர்கள் கோரிக்கை

ஆடி கிருத்திகை: ஆவடி – திருத்தணி சிறப்பு பேருந்துகளை இயக்க பக்தர்கள் கோரிக்கை

-

- Advertisement -

ஆடி கிருத்திகையை முன்னிட்டு, ஆவடியில் இருந்து திருத்தணி முருகன் கோவிலுக்குச் செல்ல சிறப்புப் பேருந்துகளை இயக்க வேண்டும் என அப்பகுதி பக்தர்கள் அரசுப் போக்குவரத்து கழகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஆடி கிருத்திகை

we-r-hiring

தடம் எண் 97சி நிறுத்தப்பட்டதால் ஏற்பட்ட சிரமம்

முன்னதாக பாரிமுனையில் இருந்து பாடி சிவன் கோவில், திருமுல்லைவாயில் சிவன் கோவில், பச்சையம்மன் கோவில், திருநின்றவூர் பெருமாள் கோவில், திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் என சுமார் 89 கி.மீ. தொலைவில் உள்ள ஆன்மீக நகரங்களை இணைக்கும் வகையில் ‘தடம் எண்: 97சி’ மாநகரப் பேருந்து இயக்கப்பட்டு வந்தது. இதனால் பக்தர்கள் எந்தவித சிரமமுமின்றி கோவில்களைத் தரிசித்து வந்தனர்; வியாபாரிகளும் பெருமளவில் பயனடைந்தனர்.

ஆனால், சென்னை – திருத்தணி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள், மோசமான சாலை நிலைமை மற்றும் பட்டாபிராம் ரயில்வே கேட் போன்ற காரணங்களால் இந்த பேருந்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக ஆவடி மற்றும் அம்பத்தூர் பகுதி மக்கள், திருத்தணி முருகன் கோவிலுக்குச் செல்ல கோயம்பேடு அல்லது பூந்தமல்லி பகுதிக்குச் சென்று சுற்றியே செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

ரயில் சேவைகளின் பற்றாக்குறை

அதேபோல, சென்னையில் இருந்து திருத்தணிக்குத் தினமும் 11 மின்சார ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் விசேஷ நாட்கள் மற்றும் பண்டிகைக் காலங்களில் மக்கள் கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கி அவதிப்பட்டு வருகின்றனர்.

சிறப்புப் பேருந்துகள் இயக்க வேண்டுகோள்

புகழ்பெற்ற திருத்தணி முருகன் கோவிலில் வரும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி ஆடி கிருத்திகை திருவிழா விமரிசையாக நடைபெறவுள்ளது. எனவே, பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்த ஆடி கிருத்திகை பண்டிகையை முன்னிட்டு ஆவடியில் இருந்து திருத்தணிக்குச் சிறப்புப் பேருந்துகளை இயக்கப் போக்குவரத்து கழகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆவடி மற்றும் அம்பத்தூர் பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

MUST READ