Homeசெய்திகள்மாவட்டம்அங்கன்வாடிக்குள் புகுந்து ஆய்வு செய்து அத்துமீறல்?: த.வெ.க நிர்வாகி மீது பெண் ஊழியர் புகார்!

அங்கன்வாடிக்குள் புகுந்து ஆய்வு செய்து அத்துமீறல்?: த.வெ.க நிர்வாகி மீது பெண் ஊழியர் புகார்!

-

- Advertisement -

கள்ளக்குறிச்சி அருகே பெண் ஊழியர் தனியாக இருந்தபோது அங்கன்வாடி மையத்திற்குள் நுழைந்து, அனுமதியின்றி ஆய்வு செய்து சாதிப் பெயரைச் சொல்லித் திட்டியதாகத் தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) நிர்வாகி மீது பகிரங்கக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பணியாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் அருகே உள்ள பாக்கம் கிராமத்தில் செயல்பட்டு வரும் 2-வது எண் அங்கன்வாடி மையத்தில் மேகலா என்பவர் பணியாளராகப் பணியாற்றி வருகிறார். நேற்று வழக்கம்போல மேகலா மையத்தில் சமையல் பணியில் ஈடுபட்டிருந்தபோது, தமிழக வெற்றிக் கழகத்தின் ரிஷிவந்தியம் ஒன்றிய இணைச் செயலாளரான பிரபுராஜ் என்பவர் திடீரென அங்கன்வாடி மையத்திற்குள் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

we-r-hiring

அனுமதியின்றி அத்துமீறல் – ஒருமையில் பேச்சு
தான் தனியாக இருக்கும் நேரத்தில் அனுமதியின்றி உள்ளே நுழைந்தது குறித்துக் கேள்வி எழுப்பிய மேகலா, “வெளியே வந்து பேசுங்கள்” எனக் கூறியுள்ளார். அதற்கு பிரபுராஜ், “நான் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி, மையத்தை ஆய்வு செய்யவே வந்துள்ளேன்” எனக் கூறியதுடன், மேகலாவின் சாதிப் பெயரை குறிப்பிட்டு ஒருமையில் பேசி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

அங்கன்வாடிக்குள் புகுந்து ஆய்வு செய்து அத்துமீறல்?: த.வெ.க நிர்வாகி மீது பெண் ஊழியர் புகார்!

இதனால் கடும் அச்சமடைந்த மேகலா, உடனடியாகத் தனது கணவருக்குத் தகவல் தெரிவித்தார்.

முன்னுக்குப் பின் முரணான பதில்கள்
தகவலறிந்து விரைந்து வந்த மேகலாவின் கணவர், “நீங்கள் யார்? எந்த அதிகாரத்தின் அடிப்படையில் உள்ளே நுழைந்து ஆய்வு செய்கிறீர்கள்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்குப் பிரபுராஜ் முதலில், “நான் ரிப்போர்ட் ஆபீஸர், ரிப்போர்ட் எடுக்க வந்தேன்” என்று கூறியுள்ளார். பின்னர், “நான் த.வெ.க கட்சியில் பொறுப்பில் இருக்கிறேன், ஆனால் செய்தியாளராகத்தான் வந்தேன்” எனக் கூறி முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்ததாக மேகலா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல் நிலையத்தில் புகார் & அதிகாரி மீது குற்றச்சாட்டு
இச்சம்பவம் குறித்து மேகலா வடபொன்பரப்பி காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக அங்கன்வாடி வட்டார அலுவலர் நிரஞ்சனா நேரில் விசாரணை நடத்தினார்.

அப்போது பாதிக்கப்பட்ட மேகலாவின் கணவர், “என் மனைவியை பாதுகாப்பு கருதி இங்கிருந்து வெளியே அனுப்புங்கள்” எனக் கோரியுள்ளார். அதற்கு அந்த அதிகாரி, “அங்கன்வாடியின் பெயர் கெட்டுவிடக் கூடாது, அதனால் அனுப்ப முடியாது” எனக் கூறி த.வெ.க நிர்வாகிக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக மேகலா தரப்பில் மேலும் ஒரு அதிர்ச்சி குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு கோரிக்கை
இச்சம்பவத்தால் அவர் அச்சத்தில் உள்ளதாகத் தெரிவித்துள்ள அங்கன்வாடி பணியாளர் மேகலா, தனக்கு உரிய பணிப் பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும், அச்சமின்றிப் பணியாற்றும் சூழலை அதிகாரிகள் ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். அரசு அங்கன்வாடி மையத்திற்குள் அரசியல் கட்சி நிர்வாகி புகுந்து அத்துமீறியதாகக் கூறப்படும் இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலத்தில் பரபரப்பு: ஜாமீனில் வெளிவந்த த.வெ.க. பிரமுகர் மணிகண்டன் மீண்டும் கைது!

MUST READ