மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தச் ஒப்புக்கொண்டதன் மூலம் தவெக அரசு மீண்டும் மீண்டும் தவறுகளைச் செய்து வருகிறது என்றும், அம்மாநில அரசுடன் தமிழக அரசு எந்த வகையிலும் பேசக் கூடாது என்றும் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
கர்நாடகாவில் வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி மேகதாது அணை குறித்து நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் விஜய் கர்நாடகம் செல்லவுள்ளதாக வேளாண் துறை அமைச்சர் வினோத் கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். அரசின் இந்த முடிவுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துப் பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

”காவிரி உரிமையைத் தாரைவார்க்கும் செயல்”
தனது அறிக்கையில் அன்புமணி இராமதாஸ் குறிப்பிட்டிருப்பதாவது, ”மேகதாது அணை குறித்துக் கர்நாடக அரசுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தினால், அதை இருதரப்புப் பிரச்சினையாக நாமே ஏற்றுக்கொண்டதாக ஆகிவிடும். அதற்குப் பிறகு ‘அண கட்டக் கூடாது’ என்பது தீர்வாக அமையாது. மாறாக, அணையின் கொள்ளளவு எவ்வளவு இருக்க வேண்டும், தண்ணீர் திறக்கும் நடைமுறைகள் என்ன என்பதாகவே பேச்சுவார்த்தை திசைமாறும். இது காவிரியின் உரிமைகளை மொத்தமாகக் கர்நாடகத்திடம் தாரைவார்ப்பதற்குச் சமமானதாகும். எனவே, முதலமைச்சர் விஜய் அவர்கள் கர்நாடகம் சென்று பேசச் ஒப்புக்கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.”
தன்னிச்சையான முடிவுக்கு எதிர்ப்பு
மேகதாது போன்ற உணர்வுபூர்வமான விவகாரங்களில் தமிழக அரசு தன்னிச்சையாக முடிவெடுக்கக் கூடாது. விவசாயிகள் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசித்த பிறகே நிலைப்பாட்டைத் தீர்மானிக்க வேண்டும். கர்நாடக அரசின் அழைப்பை ஏற்று முதலமைச்சர் விஜய் அங்கு செல்வது மாநிலத்திற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். எனவே, கர்நாடகத்திற்குச் செல்லும் முடிவை முதலமைச்சர் உடனடியாகக் கைவிட வேண்டும். சட்டப் போராட்டங்களின் மூலமே மேகதாது அணை கட்டும் கர்நாடகத்தின் சதித் திட்டத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் அன்புமணி இராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
