திண்டுக்கல் மாவட்டம் பழநியில் தண்டபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் மோசடியாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள 3 பேரின் ஜாமீன் மனுக்களைத் திண்டுக்கல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.


பழநி பூங்கா ரோட்டில் அமைந்துள்ள தண்டபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை மோசடியாகப் பத்திரப்பதிவு செய்த வழக்கில், சி.பி.சி.ஐ.டி. போலீசார் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் இதுவரை விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெள்ளத்துரை, பழநி புதுாரைச் சேர்ந்த சேதுபதி, மற்றும் பத்திரம் தயாரித்துக் கொடுத்த வழக்கறிஞர் அன்வர்தீன் உள்ளிட்டோர் சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள பத்திர எழுத்தர் ஜெயபிரகாஷைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இதனிடையே, இவ் வழக்கில் தொடர்புடைய ஜஸ்டின் மணிகண்டன் என்பவரும் சமீபத்தில் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஜாமீன் மனு தள்ளுபடி கைது செய்யப்பட்டுள்ளவர்களில் முருகதாஸ், சேதுபதி, அன்வர்தீன் ஆகியோர் தரப்பில் தங்களுக்கு ஜாமீன் கோரி திண்டுக்கல் முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று (ஆக. 7) மாஜிஸ்திரேட் பாக்கியராஜ் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மூன்று நபர்களின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ஏற்கனவே இதே வழக்கில் கைதான வெள்ளத்துரையின் ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சிறையில் அடைப்பு இதற்கிடையில், வெள்ளத்துரை, முருகதாஸ், சேதுபதி மற்றும் அன்வர்தீன் ஆகிய 4 பேரையும் மதியம் வரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.
தற்போது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, இவர்கள் நான்கு பேரும் இன்று மாலை மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட உள்ளனர். நில மோசடி வழக்கில் கைதானவர்கள் மீது தொடர்ந்து சட்ட நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
