தமிழ்நாட்டில் கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு கடந்த 25 ஆண்டுகளில் மூன்றில் ஒரு பங்காக அதலபாதாளத்திற்குக் குறைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், இது அரசுப் பள்ளிகளை அழிப்பதற்கான திட்டமிட்ட சதியா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
நிதி ஒதுக்கீடு வீழ்ச்சி குறித்த விவரங்கள். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்,

- ஆண்டு 2000-01: தமிழகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) கல்வித்துறைக்கு 3.92% (ரூ.4,949 கோடி) நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
- ஆண்டு 2010-11: இது 2.64% ஆகக் குறைக்கப்பட்டு, பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்விக்கு மொத்தம் ரூ.11,899 கோடி ஒதுக்கப்பட்டது.
- ஆண்டு 2020-21: பொருளாதாரம் வளர்ச்சியடைந்திருந்த போதிலும், கல்விக்கான ஒதுக்கீடு 2.19% ஆகக் (ரூ.39,233 கோடி) சரிந்தது.
- நடப்பாண்டு (2026-27): பள்ளிக்கல்விக்கு 1.09%, உயர்கல்விக்கு 0.21% என மொத்தம் 1.30% மட்டுமே (ரூ.52,920 கோடி) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
25 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த 3.92% விகிதத்தின்படி கணக்கிட்டால், நடப்பாண்டில் கல்வித்துறைக்கு ரூ.1,59,439 கோடி கிடைத்திருக்க வேண்டும். ஆனால், தற்போது ஒதுக்கப்பட்டுள்ள தொகையானது அதைவிட ரூ.1,06,519 கோடி குறைவு என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசுப் பள்ளிகளின் வீழ்ச்சியும் மாணவர் சேர்க்கை குறைப்பும்
கல்விக்கு நிதி ஒதுக்கீடு தொடர்ந்து குறைக்கப்படுவதால், அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் புள்ளிவிவரங்களின்படி, 2015-16 இல் 75.52 லட்சமாக இருந்த அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை, 2025-26 இல் 43.03 லட்சமாக அதாவது 32.49 லட்சம் வரை அதிரடியாகக் குறைந்துள்ளது. மறுபுறம், அதே காலகட்டத்தில் தனியார் பள்ளிகளின் மாணவர் சேர்க்கை 36.56 லட்சத்தில் இருந்து 62.03 லட்சமாக உயர்ந்துள்ளது. அரசுப் பள்ளிகளின் வீழ்ச்சியின் மீதுதான் தனியார் பள்ளிகள் வளர்ந்து வருவதாகவும், தனியார் பள்ளிகளின் வளர்ச்சிக்காகவே அரசுப் பள்ளிகள் திட்டமிட்டு அழிக்கப்படுகிறதா என்ற சந்தேகம் எழுவதாகவும் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
கோரிக்கைகள்
அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க ஒவ்வொரு வகுப்பிற்கும் குறைந்தபட்சம் ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைந்தது 3% ஆக உடனடியாக உயர்த்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
“யாரை ஏமாத்த இந்த வேலை?” – லஞ்ச ஒழிப்புத் துறையை விளாசித் தள்ளிய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை!
