எல்லா அதிகார மையங்களும் சென்னையிலேயே இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும், நிர்வாகப் பரவலாக்கத்திற்காகச் சில துறைகளின் தலைமையகங்களை மதுரை, திருச்சி, கோவை போன்ற மாவட்டங்களுக்கு மாற்ற வேண்டும் என்றும் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பல்வேறு முக்கிய அரசியல் மற்றும் நிர்வாகப் பிரச்சினைகள் குறித்துப் பேசினார்.

கார்த்தி சிதம்பரத்தின் முக்கியக் கருத்துகள்:
நிர்வாகப் பரவலாக்கம்: தமிழ்நாட்டின் அனைத்து அதிகார மையங்களும் சென்னையை மட்டுமே மையமாகக் கொண்டிருக்கக் கூடாது. சில முக்கியத் துறைகளை மதுரை, திருச்சி மற்றும் கோவை போன்ற நகரங்களுக்கு மாற்றலாம். மேலும், தமிழகச் சட்டப்பேரவைக் கூட்டத்தைத் திருச்சியிலும், அமைச்சரவைக் கூட்டங்களைப் பல்வேறு மாவட்டங்களிலும் நடத்த வேண்டும் என அவர் யோசனை தெரிவித்தார்.
மின் துறை குறித்து வெள்ளை அறிக்கை: தவெக அரசு தனது நிதிநிலை குறித்தது போன்று, தற்போது நிலவும் மின்சாரம் தொடர்பாகவும் ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்.
தமிழகத்தில் நிலவும் மின்சாரப் பற்றாக்குறைக்குத் தவெக அரசு காரணமல்ல என்றாலும், அனுபவமில்லாத அமைச்சர்கள் அதிகாரிகள் எழுதிக் கொடுப்பதைப் படித்துவிட்டு மின் தடையை நியாயப்படுத்திப் பேச வேண்டாம் என அவர் விமர்சித்தார்.
ஜெம் வீரமணி வழக்கு: ஜெம் வீரமணி பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும், ‘கட்டப்பஞ்சாயத்தில்’ ஈடுபட்டுப் பணம் பெற்றவர்கள் யார் என்பது குறித்தும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இருப்பினும், இந்த வழக்கில் நடவடிக்கை தாமதமானதற்குக் கடந்த ஆட்சியாளர்களைக் குற்றம்சாட்டுவதற்குத் தகுந்த ஆதாரங்கள் இல்லை என்றார்.
அரசியல் நிலவரங்கள்: தமிழக இடைத்தேர்தல்களில் தவெகவுக்கான அரசியல் சூழல் சாதகமாக உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டு ராஜினாமா செய்தவர்கள் மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிடுவதை தான் ஏற்றுக்கொள்ளவில்லை என்றார்.
மேலும், கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெகவுக்கு ஆதரவளித்தாலும், அவர்கள் ஆட்சியில் பங்கு பெறவில்லை என்றும் குறிப்பிட்டார்.
