ஒன்றிய – மாநில உறவுகள் மற்றும் இந்தியக் கூட்டாட்சித் தத்துவத்தை வலுப்படுத்துவது தொடர்பாக ஆராய முந்தைய திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவைத் தமிழ்நாடு அரசு கலைத்திருப்பது தவறானதும் வருந்தத்தக்கதுமான முடிவு என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கருத்தில், இந்தியக் கூட்டாட்சித் தத்துவத்தையும் மாநிலங்களின் அரசியலமைப்பு உரிமைகளையும் வலுப்படுத்துவதற்கான முக்கியமான அறிவுசார் மற்றும் அரசியல் முயற்சியைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லாமல் கைவிடுவது, தமிழ்நாட்டின் உரிமைகளையும் கூட்டாட்சித் தத்துவத்தையும் பலவீனப்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மாநிலங்களுக்கு இடையிலான அதிகாரப் பகிர்வு, மாநில சுயாட்சி, நிதி அதிகாரம், ஆளுநரின் அதிகார வரம்பு, சட்டமன்றங்களின் உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரச்சினைகளை ஆராய்வதற்காக இந்த உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அக்குழுவின் அறிக்கையை முழுமையாகப் பரிசீலித்து, தேசிய அளவிலான விவாதமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டிய நேரத்தில், அதன் பணிகளை முடக்குவது தவறான அணுகுமுறை என்றும் விமர்சித்துள்ளார்.
மேலும், அரசின் விளக்கத்தில் கூறப்பட்டுள்ளபடி, இந்தப் பணிகள் மாநில சட்ட ஆணையத்திடம் ஒப்படைக்கப்படுவது மட்டுமே உயர்நிலைக் குழுவின் தேவையை நிறைவேற்றிவிடாது எனத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, அரசியலமைப்பு மற்றும் கூட்டாட்சித் தத்துவம் குறித்த ஆழமான ஆய்வை மேற்கொள்வதற்காக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் அமைக்கப்பட்ட நிபுணர் குழு சிறப்பாகச் செயல்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய இந்திய அரசியல் சூழலில் ஒன்றிய அரசிடம் அதிகாரங்கள் குவிக்கப்படுவதும், மாநிலங்களின் அரசியலமைப்பு உரிமைகள் பலவீனப்படுத்தப்படுவதும் கவலை அளிப்பதாக ஜோதிமணி தெரிவித்துள்ளார். இத்தகைய சூழலில், கூட்டாட்சியைப் பாதுகாப்பதற்கும் மாநிலங்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும்; கைவிடப்படக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அரசியல் ஆட்சி மாற்றங்கள் இயல்பானவை என்றாலும், மாநிலங்களின் உரிமைகள், அதிகாரப் பகிர்வு, ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பைப் பாதுகாப்பது போன்ற அடிப்படை நோக்கங்கள் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டவை என்றும், அவை ஆட்சி மாற்றங்களைக் கடந்து தொடரப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தமிழ்நாட்டின் பிரச்சினை மட்டுமல்ல என்றும், இந்தியாவை உண்மையான கூட்டாட்சிக் குடியரசாகவும், மாநிலங்களின் உரிமைகளுக்கு உரிய மதிப்பளிக்கும் ஜனநாயக நாடாகவும் உருவாக்க விரும்பும் அனைவரின் கவலை என்றும் குறிப்பிட்டுள்ள ஜோதிமணி, மாநில சுயாட்சி என்பது பிரிவினைக்கான குரல் அல்ல; வலுவான, சமத்துவமான இந்தியக் கூட்டாட்சிக்கான அடிப்படைக் குரல் எனத் தனது கருத்தை வலியுறுத்தியுள்ளார்.
