திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் சுற்றுப்பகுதியில் உள்ள கிராமத்தில், இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் பூமிக்கடியில் புதைத்து வைக்கப்பட்டுள்ள வெடிகுண்டுகளால் எப்பொழுது என்ன ஆபத்து வருமோ என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த வெடிகுண்டுகளை உடனடியாகப் பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்களும் கிராமவாசிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆங்கிலேயர் கால ஆயுதக் கிடங்கு
கும்மிடிப்பூண்டி சிப்காட் சுற்றுப்பகுதியில் ஏராளமான கிராமங்கள் அமைந்துள்ள நிலையில், அங்குள்ள சிறுபுழல்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட முத்துரெட்டிகண்டிகை கிராமத்தில் இரண்டாம் உலகப் போர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் பூமிக்கடியில் புதைக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. கடந்த 1939-ஆம் ஆண்டு தொடங்கிய இரண்டாம் உலகப் போரின்போது, நீர்வளம் மிகுந்த பகுதியாக விளங்கிய கும்மிடிப்பூண்டியைத் தேர்வு செய்த ஆங்கிலேயர்கள், அங்கு ராணுவத்தைத் தக்க வைத்து ஆயுதக் கிடங்குகளை அமைத்ததாகக் குடியிருப்புவாசிகள் தெரிவிக்கின்றனர்.

ஆயுதக் கிடங்கிற்கு ரயில்கள் வந்து செல்ல அப்போது தண்டவாளங்களும் அமைக்கப்பட்டு, காலப்போக்கில் தொழிற்சாலைகள் அதிகரித்ததால் அந்தத் தண்டவாளங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. போர் முடிந்ததும் அப்போது சேமித்து வைக்கப்பட்ட வெடிகுண்டுகள் பல ஆண்டுகளாகப் பூமிக்கடியிலேயே புதைக்கப்பட்டுள்ளதால், சுற்றுப்புற கிராம மக்கள் மத்தியில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.
பலத்த பாதுகாப்பு மற்றும் விமானப்படை ஆய்வு
வெடிகுண்டுகள் அனைத்தும் பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டு, கான்கிரீட் மூலம் 6 இடங்களில் தடுப்புத் தொட்டிகள் போல அமைக்கப்பட்டுள்ளன. இதன் சுற்றிலும் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டு, யாரும் ஏறிச் செல்லாதவாறு சுவரின் மீது கண்ணாடித் துண்டுகளும் கம்பி வேலியும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 24 மணி நேரமும் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், ஆவடியில் உள்ள விமானப்படை அதிகாரிகள் அவ்வப்போது நேரில் வந்து ஆய்வு செய்து செல்வதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 90-களிலும், 2000-ஆம் ஆண்டிலும் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் ராக்கெட் லாஞ்சர் வெடித்துச் சிதறியதாகவும், அப்போது ஏராளமான வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டதாகவும் கிராம மக்கள் நினைவுகூர்கின்றனர்.
பொதுமக்களின் கோரிக்கை
“எப்போது வேண்டுமானாலும் இந்த வெடிகுண்டுகள் வெடித்துச் சிதறினால் மிகப்பெரிய சேதம் ஏற்படும் என்பதால், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வெடிகுண்டுகள் எங்கெங்கு உள்ளன என்பதைக் கண்டறிந்து அவற்றை முற்றிலுமாகச் செயலிழக்கச் செய்ய வேண்டும்” எனத் துளசிநாராயணன், குமரவேல், முனுசாமி, ஓபுல், சல்லியேந்திரன், சேகர் மற்றும் முத்துரெட்டிகண்டிகை மூதாட்டி உள்ளிட்ட கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மத்திய, மாநில அரசுகள் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, கிராம மக்களின் அச்சத்தைப் போக்கி பாதுகாப்பான சூழலை உறுதி செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
