புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் புதிய குளம் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மண்ணுக்குள் புதைந்திருந்த 516 பழங்காலச் செம்பு நாணயங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
குளம் வெட்டும் பணியில் வெளிவந்த புதையல்
பொன்னமராவதி தாலுகாவிற்கு உட்பட்ட சேரனூர் ஊராட்சியில், ‘விபிஜி ராம் ஜி’ திட்டத்தின் கீழ் புதிய குளம் வெட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டப் பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டு வந்தனர். நேற்றைய தினம் வழக்கம் போல் தொழிலாளர்கள் மண்ணைத் தோண்டிக் கொண்டிருந்தபோது, மண்ணுக்கு அடியில் துணியால் சுற்றப்பட்ட நிலையில் மர்ம முடிச்சு ஒன்று தென்பட்டுள்ளது.

தொழிலாளர்கள் அந்த முடிச்சை எடுத்துப் பிரித்துப் பார்த்தபோது, அதனுள் ஏராளமான பழங்காலச் செம்பு நாணயங்கள் இருந்தது தெரியவந்தது. உடனடியாக அவற்றை எண்ணிப் பார்த்ததில் மொத்தம் 516 செம்பு நாணயங்கள் இருந்தன.
சிவன், சூலாயுதம் பொறித்த நாணயங்கள்
கண்டெடுக்கப்பட்ட அந்தப் பழங்கால செம்பு நாணயங்களைச் சுத்தம் செய்து பார்த்தபோது, அவற்றில் பாம்பு, சூலாயுதம் மற்றும் சிவபெருமானின் உருவங்கள் மிகவும் நேர்த்தியாகப் பொறிக்கப்பட்டிருந்தன. இவை வரலாற்றுச் சிறப்புமிக்க பழங்கால நாணயங்கள் என்பதால், இது எந்த மன்னர்கள் காலத்தைச் சேர்ந்தவை என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.
வருவாய்த் துறையினரிடம் ஒப்படைப்பு
நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டது குறித்து உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, ஊராட்சிச் செயலாளர் மற்றும் மக்கள் நலப் பணியாளர் ஆகியோர் முன்னிலையில், கிராம நிர்வாக அலுவலர் (VAO) மற்றும் பொன்னமராவதி வட்டாட்சியரிடம் அந்த 516 நாணயங்களும் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, அந்த நாணயங்கள் பொன்னமராவதி வட்டாட்சியர் அலுவலகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுப் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. தொல்லியல் துறையினர் இந்த நாணயங்களை ஆய்வு செய்தால், இதன் வரலாற்றுப் பின்னணி மற்றும் இது எந்த நூற்றாண்டைச் சேர்ந்தது என்பது குறித்த முழுமையான தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
