சென்னை அம்பத்தூர் அருகே இளம் பெண் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரது கணவரே ஆட்டோவில் வைத்து மனைவியைக் கொலை செய்துவிட்டு ஒன்றும் தெரியாதது போல் வீட்டில் தூங்கியது அம்பலமாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ஆட்டோ ஓட்டுநரான கணவரைப் போலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
ஓடும் ஆட்டோவில் நடந்த கொடூரம்
சென்னை அம்பத்தூர் மேனாம்பேடு, இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் வைதேகி (34). இவரது கணவர் சின்னா (36), ஆட்டோ ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு இடையே கடந்த சில ஆண்டுகளாகவே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், நேற்று இரவு 10 மணியளவில் வைதேகி தனது ஆண் நண்பரின் வீட்டின் அருகே இருப்பதாகச் சின்னாவுக்குத் தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக அங்கு ஆட்டோவில் சென்ற சின்னா, மனைவியை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டுள்ளார். பயணத்தின்போது, “திருமணத்தை மீறிய இந்த உறவை இன்றோடு முடித்துக்கொள்ள வேண்டும்” என எச்சரித்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. ஆத்திரமடைந்த சின்னா, தான் ஏற்கனவே மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வைதேகியின் கழுத்தில் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதனால் வலியால் அலறித் துடித்த வைதேகி, ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்துத் தப்பிக்கச் சாலையில் ஓடியுள்ளார்.
விடாமல் துரத்திச் சென்று படுகொலை
மனைவி தப்பி ஓடுவதைப் பார்த்த சின்னா, உடனடியாக ஆட்டோவை நிறுத்திவிட்டு அவரை விடாமல் துரத்திச் சென்றுள்ளார். நடுரோட்டில் வைத்து வைதேகியின் கழுத்து, மார்பு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் கத்தியால் கொடூரமாகக் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த வைதேகி சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் சின்னா அங்கிருந்து தனது ஆட்டோவில் தப்பிச் சென்றார்.
ஒன்றும் தெரியாதது போல் வீட்டில் படுத்திருந்த கணவன்
சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த போலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதியில் இருந்த சிசிடிவி (CCTV) கேமரா காட்சிகள் மற்றும் தடயங்களின் அடிப்படையில், வைதேகியின் கணவர் சின்னா மீது போலிஸாருக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டது. அவர் ஓட்டிச் சென்ற ஆட்டோ எண்ணை வைத்து முகவரியைக் கண்டறிந்த போலிஸார், சம்பவம் நடந்த இடத்தில் இருந்து மூன்றாவது தெருவில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றனர். அங்கு, மனைவியைக் கொலை செய்துவிட்டு ஒன்றும் தெரியாதது போல சின்னா அமைதியாகப் படுத்துக் கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
போலிஸ் விசாரணை அறிக்கை
“சின்னாவைப் பிடித்து விசாரணை நடத்தியதில், பலமுறை கண்டித்தும் மனைவி கேட்காமல் தொடர்ந்து வேறு நபருடன் தொடர்பில் இருந்ததால் ஆத்திரமடைந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். கொலையை மறைத்து சாதாரண மனிதன் போல் வீட்டில் வந்து படுத்துக்கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.”
தனிப்படை விசாரணை
தற்போது சின்னாவை அம்பத்தூர் உதவி ஆணையர் என்.எஸ்.குமார் தலைமையிலான தனிப்படை போலிஸார் கைது செய்து, புதூர் காவல் நிலையத்தில் வைத்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதலில் மர்மக் கொலை எனப் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சில மணி நேரங்களிலேயே கணவனே மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அம்பத்தூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
