Homeசெய்திகள்மாவட்டம்சேலத்தில் கொதித்தெழுந்த சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகள் - மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து சுதந்திர தின...

சேலத்தில் கொதித்தெழுந்த சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகள் – மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து சுதந்திர தின விழாவிலிருந்து வெளிநடப்பு – தியாகிகள் ஸ்தூபி முன் கண்டன ஆர்ப்பாட்டம்!

-

- Advertisement -

100-க்கும் மேற்பட்ட வாரிசுதாரர்கள் அவமதிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு – சேலத்தில் பெரும் பரபரப்பு சேலத்தில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழாவில், சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கு உரிய மரியாதை அளிக்காமல் மாவட்ட ஆட்சியர் அவமதித்துவிட்டதாகக் கூறி, தியாகிகளின் குடும்பத்தினர் விழாவிலிருந்து வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சேலத்தில் கொதித்தெழுந்த சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகள் - மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து சுதந்திர தின விழாவிலிருந்து வெளிநடப்பு – தியாகிகள் ஸ்தூபி முன் கண்டன ஆர்ப்பாட்டம்!

சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் இன்று (15-08-2026) மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுதந்திர தின விழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் சேலம் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

we-r-hiring

10 குடும்பங்களுக்கு மட்டுமே அழைப்பு – வாரிசுகள் ஏமாற்றம்:
ஆண்டுதோறும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழாக்களின் போது, சேலம் மாவட்டத்தில் உள்ள சுமார் 100 சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களை மாவட்ட நிர்வாகம் சார்பில் முறைப்படி அழைத்து ஆடை மற்றும் சால்வைகள் அணிவித்து கௌரவிப்பது வழக்கமாக இருந்து வந்தது.

ஆனால், இந்த ஆண்டு தியாகிகள் குடும்ப ஓய்வூதியம் பெறும் வெறும் 10 குடும்பத்தினருக்கு மட்டுமே மாவட்ட நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் வழக்கம்போல் விழாவில் பங்கேற்க வந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட தியாகிகளின் வாரிசுதாரர்கள் அங்கேயே காத்திருந்தனர்.

ஆட்சியர் அவமதித்ததாகக் குற்றச்சாட்டு – வெளிநடப்பு:
விழாவின் போது, ஓய்வூதியம் பெறும் 10 தியாகிகளின் நேரடி வாரிசுகளுக்கு மட்டுமே ஆட்சியர் இளம்பகவத் சால்வை அணிவித்துக் கௌரவித்தார். மைதானத்தில் காத்திருந்த மற்ற தியாகிகளின் வாரிசுதாரர்களைக் கண்டுகொள்ளாமலும், எவ்வித மரியாதையும் செலுத்தாமலும் ஆட்சியர் புறக்கணித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் கடும் ஆத்திரமடைந்த சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்கள், விழா மைதானத்திலிருந்து உடனடி வெளிநடப்பு செய்து, அரசுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பியவாறு வெளியேறினர்.

கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை – தொடரும் வேதனை:
வெளிநடப்பு செய்தவர்களிடம் சேலம் கோட்டாட்சியர் வடிவேல் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, “சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு ஓய்வூதியம் பெறும் 11 குடும்பங்களுக்கு மட்டுமே மரியாதை செலுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே மற்ற வாரிசுதாரர்களுக்கு மரியாதை வழங்கப்பட மாட்டாது” என்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தார்.

அதிகாரியின் இந்த பதிலால் மேலும் வேதனை அடைந்த தியாகிகளின் வாரிசுகள், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள தியாகிகள் ஸ்தூபி முன்பாகச் சென்று தரையில் அமர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தியாகிகளின் வாரிசுகள் வேதனை பேட்டி:
“கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாகச் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளான எங்களை மாவட்ட நிர்வாகம் அழைத்து உரிய மரியாதை வழங்கி வந்தது. ஆனால் இன்று எங்களை முற்றிலும் புறக்கணித்து அவமதித்துவிட்டனர்.

இது குறித்துக் கேட்டதற்கு, மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அவர்கள், ‘இது ஒன்றும் என் வீட்டு திருமணமோ, சுப நிகழ்ச்சியோ இல்லை… உங்களை அழைப்பதற்கு’ என்று மிகவும் கேவலமாகப் பேசினார். நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட தியாகிகளின் குடும்பத்தினரை இழிவாகப் பேசிய ஆட்சியரின் செயல் சுதந்திரப் போராட்ட தியாகிகளையே அவமதிக்கும் செயலாகும்” என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

சுதந்திர தின விழாவிலேயே தியாகிகளின் குடும்பத்தினர் ஆட்சியரைக் கண்டித்து வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சுதந்திர தின விழாவில் நேர்ந்த அடுத்தடுத்த சொதப்பல்கள்: விழுப்புரம் ஆட்சியர் ஏற்றிய கொடி அறுந்து விழுந்ததால் பதற்றம்!

MUST READ