சாதிச் சான்றிதழ் வழங்க அரசு அதிகாரி ஏற்படுத்திய தாமதத்திற்காக, மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவியைப் பொறுப்பாக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் மிக முக்கியக் கருத்து தெரிவித்து உத்தரவிட்டுள்ளது.
மருத்துவக் கலந்தாய்வு விண்ணப்பம் நிராகரிப்பு
மருத்துவப் படிப்பிற்கான சேர்க்கை அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து வி.கீர்த்தி என்ற மாணவி விண்ணப்பித்திருந்தார். விண்ணப்பித்த நேரத்தில் இருப்பிடம், சாதி மற்றும் கிறிஸ்தவ சிறுபான்மையினர் ஆகிய சான்றிதழ்கள் கைவசம் இல்லாததால், அவற்றை பின்னர் சமர்ப்பிப்பதாக உறுதிமொழி (Undertaking) அளித்திருந்தார். இருப்பினும், சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்வதற்கான அவகாசம் ஆகஸ்ட் 12-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. ஆனால், வருவாய்த்துறை சாதிச் சான்றிதழை ஆகஸ்ட் 15-ஆம் தேதிதான் வழங்கி உள்ளது. இதனால், குறித்த தேதிக்குள் சான்றிதழ் சமர்ப்பிக்கப்படவில்லை எனக் கூறி மாணவி கீர்த்தியின் கலந்தாய்வு விண்ணப்பத்தை மருத்துவக் கல்வி இயக்ககம் நிராகரித்தது.

உயர் நீதிமன்றத்தில் வழக்கு & வழக்கறிஞரின் வாதம்
விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து மாணவி கீர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இவ்வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாணவி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி காரசாரமான வாதங்களை முன்வைத்தார். “மாணவி உரிய நேரத்தில் சான்றிதழுக்கு விண்ணப்பித்து விட்டார். ஆனால், அரசு அதிகாரி சான்றிதழ் வழங்க ஆகஸ்ட் 15 வரை தாமதம் செய்துள்ளார். அதிகாரியின் இந்தத் தாமதத்தால் மாணவியின் மருத்துவக் கனவு பாழாகக் கூடாது” என்று வாதிட்டார்.

நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி உத்தரவு
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, “அரசு அதிகாரி சான்றிதழ் வழங்கியதில் ஏற்பட்ட தாமதத்திற்கு மாணவியை எக்காரணம் கொண்டும் பொறுப்பாக்க முடியாது” என்று அதிரடியாகத் தெரிவித்தார். மேலும், மாணவி கீர்த்தியை உடனடியாக மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என மருத்துவக் கல்வி இயக்ககத்திற்கு (DME) நீதிபதி உத்தரவிட்டார். உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, சான்றிதழ் தாமதத்தால் தவித்து வந்த பிற மாணவர்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
