தமிழகச் சட்டமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள், ஒட்டுமொத்த திராவிட இயக்க சித்தாந்தத்தின் மீதும் விடப்பட்ட நேரடி அறைகூவலாக மாறியுள்ளதாக அரசியல் விமர்சகர் மருதையன் சுட்டிக்காட்டியுள்ளார். அனைத்து சாதி அர்ச்சகர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் பச்சையான பொய்களையும், வரலாற்றைத் திரிக்கும் கீழ்த்தரமான குற்றச்சாட்டுகளையும் எதிர்கொள்ளத் திராணியின்றி திமுக தரப்பு மௌனம் காத்தது ஏன் என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.
இது குறித்து அரசியல் விமர்சகர் மருதையன் தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு,

சட்டமன்றத்தில் அரங்கேறும் பொய் மூட்டைகள்
சட்டமன்றக் கூட்டத்தொடரில் எந்தவொரு ஆக்கப்பூர்வமான விவாதமும் இல்லாமல், திட்டமிட்ட பொய்களும் அவதூறுகளும் ரீல்ஸ்களுக்காக மட்டுமே அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, அனைத்து சாதி அர்ச்சகர் விவகாரத்தை மையமாகக் கொண்டு திமுக மீது அபாண்டமான பழிகளைச் சுமத்தும் எதிர்க்கட்சிகளின் நாடகங்களைச் சுட்டிக்காட்டிய அவர், இது 1971-ம் ஆண்டிலிருந்தே பார்ப்பனரல்லாதோரை அர்ச்சகர்களாக நியமிக்க விடாமல் நீதிமன்றங்கள் மூலமாகவும், சநாதன சக்திகள் மூலமாகவும் தடுத்து வரும் நீண்ட நெடிய வரலாற்றுச் சதி என்பதையும் விளக்கினார்.
திமுகவின் மௌனம்: தொண்டர்களுக்கு உலுக்கும் அதிர்ச்சி
“பெரியாரின் பெயரைக் சொல்லக் கூடாது” என்று சட்டமன்றத்திலேயே எதிர்ப்புக் குரல்கள் ஓங்கும்போதும், திமுக ஆட்சியே இந்த விவகாரத்தில் சதி செய்துவிட்டது என்று அப்பட்டமான அவதூறுகள் வீசப்படும்போதும், ஆளுங்கட்சியின் தரப்பில் இருந்து எந்தவிதமான கொந்தளிப்போ அல்லது சரியான எதிர்வினையோ வராதது ஏன் என அவர் கேள்வி எழுப்பினார். சமூக வலைதளங்களில் சிறு விஷயங்களுக்காகக் கொந்தளிக்கும் திமுக உடன்பிறப்புகள், இயக்கத்தின் ஒட்டுமொத்த தன்மையையும், வரலாற்றுச் சாதனைகளையும் ஒருவன் கேள்விக்குள்ளாக்கும்போது மௌனமாக இருப்பது எந்த வகையில் நியாயம்? இது பெரியாருக்கும், அம்பேத்கருக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படை கொள்கைக்கும் இழைக்கப்படும் மிகப்பெரிய துரோகம் என்று அவர் கடுமையாக விமர்சித்தார்.
கோயில் சொத்துக்களும், சநாதன சக்திகளின் கைவரிசையும்
அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களின் சொத்துகளும் நிலங்களும் ஏழை எளிய தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காகப் பயன்படுவதைத் தடுத்து, அவற்றை மீண்டும் சநாதன சக்திகளின் வசம் ஒப்படைக்கத் துடிக்கும் மறைமுக அஜெண்டாக்கள் தற்போது தீவிரமடைந்துள்ளன. அயோத்தியில் ராமர் கோவிலில் நடந்த கூத்துகளைப் போல, தமிழ்நாட்டிலும் கோயில்களைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரத் துடிக்கும் கூட்டத்திற்குத் தற்போது ஆதரவுக் குரல்கள் எழுவது எதைக் காட்டுகிறது என அவர் கேள்வி எழுப்பினார்.
“அறநிலையத்துறை அறிக்கையைப் படிக்காத உறுப்பினர்கள்”
அறநிலையத்துறை மானியக் கோரிக்கைக் குறிப்புகளைச் சரியாகப் படிக்காமலும், அதன் வரலாற்றுப் பின்னணியை உணராமலும் சட்டமன்றத்தில் அமைச்சர்களும் உறுப்பினர்களும் நடந்து கொள்வது ஒட்டுமொத்த அரசையும் தற்குறி அரசாங்கமாகக் காட்டுகிறது என மருதையன் எச்சரித்தார். தமிழக அரசியலில் ஆன்மீகத்தின் பெயரால் நடக்கும் இந்த நயவஞ்சக அரசியலை இனியாவது திமுக தலைமை உணர்ந்து தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்பதே கோடிக்கணக்கான திராவிட இயக்கத் தொண்டர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
“சட்டமன்றமா? பிக் பாஸ் நிகழ்ச்சியா?” – நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமை சாடல்!
