சினிமா கவர்ச்சியையும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களையும் நம்பி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்துள்ள தற்போதைய அரசுக்குத் தொலைநோக்குச் சிந்தனையோ, நிர்வாகத் திறமையோ அல்லது மக்களுக்குப் பதிலளிக்கும் கடமையோ இல்லை என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார். மாமன்னர் பூலித்தேவனின் நினைவு தினத்தை முன்னிட்டு அவருக்கு வீர வணக்கம் செலுத்திய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன், தமிழக அரசின் செயல்பாடுகளையும் முதல்வர் விஜய்யின் நகர்வுகளையும் கடுமையாகச் சாடிப் பேசினார்.
மேட்டூர் அணை திறப்பும் விவசாயிகளின் வேதனையும்
டெல்டா மாவட்டங்களில் கடுமையான வறட்சி நிலவி வரும் சூழலில், ஜூன் 12-க்குப் பதிலாக செப்டம்பர் மாதத்தில் மேட்டூர் அணையைத் திறப்பதனால் விவசாயிகளுக்கு எந்தவிதமான பயனும் இல்லை என்று டிடிவி தினகரன் குற்றம் சாட்டினார். விவசாய சங்கத் தலைவர்களிடமோ அல்லது விவசாயிகளிடமோ முறையான ஆலோசனைகளை மேற்கொள்ளாமல், வெறும் விளம்பரத்திற்காக மற்றும் ‘ரீல்ஸ்’ வீடியோக்களுக்காக மட்டுமே மேட்டூர் அணை திறப்பு விழா நடத்தப்படுவதாக அவர் சாடினார்.

“தாய்மொழியில் பேசத் தகுதியில்லாத அமைச்சர்கள்”
தமிழக அமைச்சரவையின் செயல்பாடுகள் குறித்து விமர்சித்த அவர், “தமிழ்நாட்டின் தாய்மொழியான தமிழைக் கூடச் சரியாகப் பேசத் தெரியாதவர்களும், சட்டமன்றத்தில் எண்களையும் குறிப்புகளையும் பார்த்துப் படிக்கத் திணறுபவர்களும்தான் இன்று அமைச்சர்களாகப் பொறுப்பில் உள்ளனர். நாட்டின் பிற மாநிலங்களில் படித்து உயர்ந்த நிலைக்கு வந்த தலைவர்கள் தமிழை அழகாகப் பேசும் நிலையில், தற்போதைய அமைச்சர்களின் அறிவற்ற நிலை தமிழ்நாட்டிற்கே வெட்கக்கேடானது” என்று தெரிவித்தார்.
ரீல்ஸ் அரசியலும் ஏமாற்றப்படும் இளைஞர்களும்
60 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு மாற்றைத் தேடிய தமிழக இளைஞர்களையும் இளம் பெண்களையும் சினிமா கவர்ச்சியைக் காட்டி ஏமாற்றிவிட்டதாகக் குறிப்பிட்ட அவர்:
சினிமாவில் ஹீரோக்கள் செய்வதை நிஜ வாழ்க்கையிலும் செய்வார்கள் என்று நம்பி ஏமாந்த மக்கள் இன்று தவித்து வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களை நம்பி ஆட்சிக்கு வந்தவர்கள், மக்களைத் தவணை முறையில் (இன்ஸ்டால்மென்ட்) ஏமாற்றி வருகின்றனர்.
தவெக அரசிடம் நிர்வாகத் திறமையோ அல்லது தொலைநோக்குப் பார்வையோ இல்லை என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துவிட்டது என்று குற்றம்சாட்டினார்.
தமிழ்நாட்டில் தற்போது நடப்பது ஒரு ‘தற்குறி அரசாங்கம்’ எனக் குறிப்பிட்ட டிடிவி தினகரன், மக்கள் விரைவில் இந்த அரசுக்கு உரிய பாடம் கற்பிப்பார்கள் என்றும் தெரிவித்தார்.
“சட்டமன்றமா? பிக் பாஸ் நிகழ்ச்சியா?” – நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமை சாடல்!
