திருவிழாவிற்குச் சென்ற இடத்தில் நேர்ந்த கொடூரம் – சேதுபாவாசத்திரம் போலிஸார் போக்சோ சட்டத்தில் அதிரடி நடவடிக்கை
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே 16 வயது சிறுமியை ஏமாற்றி கூட்டுப் பாலியல் தொல்லை அளித்த சம்பவம் தொடர்பாக 2 சிறுவர்கள் உட்பட 5 பேரை சேதுபாவாசத்திரம் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

ஏமாற்றி அழைத்துச் சென்ற வாலிபர்
பேராவூரணி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, கடந்த மாதம் 30-ஆம் தேதி தனது பாட்டி வாழும் ஊரில் நடைபெற்ற கோயில் திருவிழாவிற்குச் சென்றுள்ளார். அப்போது, அச்சிறுமிக்கு ஏற்கனவே பழக்கமான புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியைச் சேர்ந்த சந்தோஷ் (24) என்பவரும் அங்கு வந்துள்ளார். சந்தோஷ், அச்சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி தனியாக அழைத்துச் சென்றுள்ளார்.
பின்தொடர்ந்து சென்று கொடூரம்
சந்தோஷ் சிறுமியை தனியாக அழைத்துச் செல்வதைக் கண்ட அடைக்கத்தேவன் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் (20), அவரது நண்பர் சோலைக்காடு பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (18) மற்றும் 17, 15 வயதுடைய இரு சிறுவர்கள் என 4 பேர் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.
அங்கு சென்ற அந்த 4 பேரும் சேர்ந்து சந்தோஷை மிரட்டி விரட்டியடித்துள்ளனர். அதன்பின், தனிமையில் இருந்த சிறுமிக்கு 4 பேரும் சேர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.
போக்சோ சட்டத்தில் 5 பேர் கைது
வீடு திரும்பிய சிறுமியிடம் அவரது தாய் விசாரித்தபோது, அச்சிறுமி சரியான பதிலளிக்காமல் அமைதி காத்துள்ளார். இதனிடையே, இச்சம்பவம் குறித்து கிராம மக்களுக்குத் தெரியவரவே, அவர்கள் உடனடியாக சேதுபாவாசத்திரம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் போலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த அதிகாரப்பூர்வ புகாரின் அடிப்படையில் சேதுபாவாசத்திரம் போலிஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்ற சந்தோஷ், தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்த அரவிந்த், ஆறுமுகம் மற்றும் இரு சிறுவர்கள் ஆகிய 5 பேர் மீதும் போக்சோ மற்றும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலிஸார், அவர்கள் 5 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
