தாம்பரம் அடுத்த ஆலப்பாக்கம் பகுதியில் முதல் கள்ளக்காதலனுடன் சேர்ந்து, இரண்டாவது கள்ளக்காதலனை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்ய முயன்ற பெண் மற்றும் அவரது காதலன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவத்தின் பின்னணி
ஆலப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (47). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவருக்கு, சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டது.

இதனால் வேலைக்குச் செல்ல முடியாமல் அவர் வீட்டிலேயே இருந்து வருகிறார். ரமேஷின் மனைவி பூங்கொடி (45). இவர்களது வீட்டிற்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ராயபுரத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் தாமோதரன் (33) என்பவர் சவாரிக்காக வந்துள்ளார். அப்போது பூங்கொடியின் செல்பேசி எண்ணைப் பெற்றுப் பேசி வந்த அவருக்குள்ளாகப் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் அது தகாத உறவாக மாறியுள்ளது.
இரண்டாவது கள்ளக்காதல்
இதனிடையே, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு இவர்களின் வீட்டு இரும்பு கேட் பழுதுபட்டுள்ளது. அதைச் சரி செய்வதற்காகத் தாமோதரன் மூலமாக, தாம்பரத்தைச் சேர்ந்த welder ஜெய்சங்கர் (38) என்பவரை பூங்கொடி வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
கேட்டைச் சரி செய்துவிட்டுச் சென்ற ஜெய்சங்கர், பூங்கொடியின் எண்ணைப் பெற்று கடந்த 4 மாதங்களாகத் தொடர்ந்து பேசி வந்துள்ளார். நாளடைவில் அவருக்கும் பூங்கொடிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது
கொலை முயற்சிக்குக் காரணம்
கடந்த 10 நாட்களாக ஜெய்சங்கர் தன்னைத் தொலைபேசியில் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பூங்கொடி, அவரது எண்ணைத் தடை (Block) செய்துள்ளார்.
இதற்கிடையில் ஆத்திரமடைந்த ஜெய்சங்கர், நேரடியாக ரமேஷின் வீட்டிற்கே சென்று பூங்கொடிக்குத் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பூங்கொடி, உடனே தனது முதல் கள்ளக்காதலனான தாமோதரனுக்குத் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்து வரவழைத்துள்ளார்.
நாடகமும் உண்மையும்
தாமோதரனும் பூங்கொடியும் சேர்ந்து ஜெய்சங்கரைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டனர். அதன்படி, வீட்டில் இருந்த இரும்பு கம்பியால் ஜெய்சங்கரின் தலையில் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் அவர் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்துள்ளார்.
பின்னர், போலீசாரை ஏமாற்றும் நோக்கில் ஜெய்சங்கர் மாடியில் இருந்து தவறி விழுந்துவிட்டதாக நாடகமாடியுள்ளனர். உடனே 108 ஆம்புலன்சுக்குத் தகவல் தெரிவித்து அவரைத் தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, மேல் சிகிச்சைக்காகச் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
போலீசார் அதிரடி கைது
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பெருங்களத்தூர் பீர்க்கன்காரணை காவல் நிலைய போலீசார், பூங்கொடியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் சந்தேகம் அடைந்த போலீசார், கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ஜெய்சங்கர் கடந்த ஒரு மாதமாகத் தொடர்ந்து தொந்தரவு செய்ததால், தாமோதரனுடன் சேர்ந்து அவரைத் தீர்த்துக்கட்ட திட்டமிட்டுக் கொலை முயற்சி செய்தது அம்பலமானது.
இதையடுத்து, பூங்கொடி மற்றும் தாமோதரன் ஆகிய இருவர் மீதும் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இரண்டு கள்ளக்காதல் விவகாரத்தில் ஒருவரைக் கொண்டு மற்றொருவரைக் கொலை செய்ய முயன்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
