இந்திய அரசியல் களத்தில் தவிர்க்க முடியாத சக்திகளாகத் திகழும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்குப் பிந்தைய பாஜகவின் மாற்றுத் தலைமை குறித்து, அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் (RSS) தீவிரமாக யோசிக்கத் தொடங்கியுள்ளதாக மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.
‘டெக்கான் குரோனிகல்’ நாளிதழில் அரசியல் ஆய்வாளர் பாசா வெங்கடேஸ்வரராவ் எழுதிய கட்டுரையை மையமாகக் கொண்டு, ‘புதிய வாசிப்பு புதிய சிந்தனை’ என்ற தொலைக்காட்சி ஊடக நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய பத்திரிகையாளர் மணி, பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தற்போதைய நகர்வுகள் குறித்து விரிவான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

மாற்றுத் தலைமையை உருவாக்குவதில் ஆர்.எஸ்.எஸ் தீவிரம்:
நிகழ்ச்சியில் பேசிய பத்திரிகையாளர் மணி, “வரும் 2029 மக்களவைத் தேர்தலை பாஜக நரேந்திர மோடியின் தலைமையிலேயே சந்திக்க அதிக வாய்ப்புள்ளது.
இருப்பினும், மோடி மற்றும் அமித் ஷா ஆகிய இருவருக்கும் அடுத்தபடியாக பாஜகவை வழிநடத்தப்போகும் மாற்றுத் தலைமை (Alternative Leadership) யார் என்பது குறித்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தற்போதே ஆலோசிக்கத் தொடங்கிவிட்டது மறுக்க முடியாத உண்மை” என்று சுட்டிக்காட்டினார்.
முதன்முறையாக ஆட்டம் காணும் பாஜகவின் வாக்கு வங்கி:
சமீபகாலமாக காங்ரோ ஜனதா கட்சியின் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், காலம் காலமாக பாஜகவின் பிரதான ஆதரவுத் தளமாக விளங்கி வந்த நடுத்தர மற்றும் உயர் நடுத்தர வர்க்கத்தினரிடையே பெரும் கொந்தளிப்பும் அதிருப்தியும் நிலவி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
முந்தைய காலங்களில் கொண்டுவரப்பட்ட வேளாண் சட்டங்கள், பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி அமலாக்கம் போன்ற பெரும் விவகாரங்களின் போது கூட நகராத பாஜகவின் உறுதியான வாக்கு வங்கி, வரலாற்றிலேயே முதன்முறையாக தற்போது ஆட்டம் காணத் தொடங்கியுள்ளது.
இந்தச் சூழலின் தீவிரத்தைப் புரிந்து கொண்டதன் விளைவாகவே, ‘போராட்டம் நடத்துபவர்களை தீவிரவாதிகளாகச் சித்தரிப்பது தவறானது; போராடுவது அவர்களின் உரிமை’ என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் அண்மையில் கருத்து தெரிவித்தார்” என மணி விளக்கினார்.
நிர்வாகத்திலும் முடிவுகளிலும் ஆர்.எஸ்.எஸ் ஆதிக்கம்:
மத்திய அரசிலும் பாஜகவுக்குள்ளும் எடுக்கப்படும் மிக முக்கியமான அனைத்து அரசியல் முடிவுகளுக்குப் பின்னாலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பே முதன்மைச் சக்தியாக விளங்குகிறது.
எவ்வித சட்ட அங்கீகாரமும் இல்லாத போதிலும், பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்த ஆண்டறிக்கையை (Progress Report) ஆர்.எஸ்.எஸ் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது.
ஜம்மு காஷ்மீருக்கான 370-வது சட்டப்பிரிவு நீக்கம், அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோவில் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்ட அமலாக்கம் எனத் தங்களது முதன்மையான சித்தாந்தக் கோரிக்கைகளை மோடி அரசு மூலம் ஆர்.எஸ்.எஸ் நிறைவேற்றிவிட்டது.
ஆனால், ‘இவற்றுக்கெல்லாம் பிறகு மோடிக்கு பின் யார்?’ என்ற கேள்வி தற்போது அந்த அமைப்பிற்குள் பூதாகரமாக எழுந்துள்ளது.
அமித் ஷாவுக்கும் சேர்த்து தேடப்படும் மாற்று:
45 வயதான நித்தின் நபீன் (Nitin Nabin) போன்ற ஆர்.எஸ்.எஸ் பின்னணி கொண்ட இளம் தலைவர்கள் பாஜகவின் முக்கியப் பொறுப்புகளுக்கு வந்து, தங்களது புதிய நிர்வாகக் குழுவை உருவாக்கி வருகின்றனர்.
எனவே, இது வெறும் பிரதமராக இருக்கும் நரேந்திர மோடிக்கான மாற்று மட்டுமல்லாமல், அமித் ஷாவுக்கும் சேர்த்தே மாற்றுத் தலைமையை உருவாக்கும் ஒரு கட்டாய நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
ராகுல் காந்தியின் எழுச்சியும் – பாஜகவின் கவலையும்:
கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு முதன்முறையாக நரேந்திர மோடியின் செல்வாக்கில் சற்று சரிவு ஏற்பட்டுள்ள அதேவேளையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் அரசியல் செல்வாக்கு படிப்படியாக உயர்ந்து வருகிறது.
ராகுல் காந்தியின் இந்த வளர்ச்சி ஆர்.எஸ்.எஸ் தலைமையைக் கவலையடையச் செய்துள்ளது.
தேசிய அளவில் பாஜகவை வீழ்த்தி ஆட்சிக்கு வரக்கூடிய ஒரே அரசியல் சக்தி காங்கிரஸ்தான் என்பதால், வரவிருக்கும் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி 150-க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைத்துவிடுமோ என்ற அச்சமும் பாஜகவிடம் எழுந்துள்ளது.
நிரந்தரமானவர்கள் யாரும் இல்லை:
“அரசியலிலும் சரி, அமைப்பிலும் சரி எந்தவொரு தனிநபரும் நிரந்தரமானவர் கிடையாது.
தனிமனிதர்களை விடத் தங்களது சித்தாந்தத்திற்கே அதிக முக்கியத்துவம் அளிக்கும் ஆர்.எஸ்.எஸ், நரேந்திர மோடி மற்றும் அமித் ஷாவுக்குப் பிந்தைய பாஜகவை வழிநடத்தத் தகுதியான அடுத்தகட்டத் தலைவர்களைக் கண்டறியும் பணிகளில் மிகத் தீவிரமாக இறங்கியுள்ளது” என்று பத்திரிகையாளர் மணி தனது பேட்டியில் அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்.
