இயக்குநர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், சந்தோஷ் பிரதாப், ஆரவ் உள்ளிட்டோர் நடிப்பில் ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நடிகர் ஆரவ் பேசியதாவது,
“இந்தப் படத்திற்கு ஆதரவு கொடுத்த ஆஹா தளத்திற்கு நன்றி. ‘கலகத் தலைவன்’ படத்தில் வில்லனாக நடித்துவிட்டு அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த சமயத்தில் தான் இந்த வாய்ப்பு சர்ப்ரைஸ் பேக்கேஜ் ஆக என்னிடம் வந்தது. தயாள் சார் என்னிடம் கதை சொன்னதும், ‘எப்பொழுது ஷூட்டிங்?’ என்று கேட்டேன். ‘அடுத்த வாரம்’ என்றார். தமிழ் சினிமாவில் பொதுவாக கதை சொல்லி படப்பிடிப்பு ஆரம்பிக்க 2 மாதங்களாவது ஆகும். ஆனால்,அவர் சொன்ன மாதிரியே அடுத்த வாரத்தில் படப்பிடிப்புக்குச் சென்று விட்டார்.
25 நாட்களில் படப்பிடிப்பு முடித்து விடுவோம் என்று சொல்லி 21 நாட்களிலேயே முடித்திருக்கிறார். டப்பிங்கில் பார்க்கும்பொழுது படம் மிகவும் நன்றாக வந்துள்ளது. வரலட்சுமி, சந்தோஷ் பிரதாப், விவேக், யாசர் என இவர்கள் அனைவருடனும் இணைந்து நடித்தது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்கள் படம் பார்த்து விட்டு சொல்லுங்கள்”