கூட்டுறவுச் சங்கங்களில் பெற்ற பயிர்க்கடன்களை எவ்வித நிபந்தனையுமின்றி முழுமையாகத் தள்ளுபடி செய்யக் கோரி, திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே 40-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பிரம்மாண்ட தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பனை ஓலையுடன் திறந்தவெளியில் போராட்டம்
திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள தனியார் நிலத்தில் இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
பந்தலுக்கு அனுமதி மறுப்பு: போராட்டம் நடைபெறும் இடத்தில் பந்தல் அமைக்கக் காவல்துறை அனுமதி மறுத்ததால், கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் கையில் பனை ஓலைகளை ஏந்தியபடி திறந்தவெளியில் போராட்டத்தைத் தொடங்கினர்.
அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை: மாவட்ட ஆட்சியரின் அழைப்பை ஏற்று, பந்தல் அமைக்க அனுமதி அளிக்கப்பட்ட பின் 40 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் ஆட்சியர் அலுவலகத்தில் மூன்று அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தச் சென்றனர்.
காவல்துறை மிரட்டல் – சாலை மறியல் முயற்சி
போராட்டக் களத்தில் பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடந்தபோது, காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் தொலைபேசி வாயிலாக பந்தல் அமைப்பவரை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாகப் பந்தல் அமைப்பவர் பணியைப் பாதியிலேயே நிறுத்திவிட்டுச் சென்றதால் ஆத்திரமடைந்த விவசாயிகள், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் செய்ய முயன்று காவல்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், பந்தல் அமைப்பவரை மீண்டும் வரவழைப்பதாகப் போலீசார் உறுதி அளித்ததைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டு, விவசாயிகளே சுயசார்பாகப் பந்தல் அமைக்கும் பணியை மேற்கொண்டனர்.
தவெகவினருடன் விவசாயிகள் கடும் வாக்குவாதம்
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மதிய உணவாகக் கஞ்சி அருந்திக் கொண்டிருந்த போது, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடி பொருத்திய காரில் வந்த சிலர் தண்ணீர் பாட்டில்களையும் உணவுப் பொட்டலங்களையும் வழங்க முயன்றனர்.
நாங்கள் கேட்கும் பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்ய அரசு நடவடிக்கை எடுக்காத போது, உணவு மற்றும் குடிநீர் வழங்கி எங்களைச் சமாதானம் செய்ய பார்க்கிறீர்களா? எனக் கூறி விவசாயிகளும் போராட்டக்காரர்களும் தவெகவினருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
உடனடியாகச் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், விவசாயிகளைச் சமாதானப்படுத்தி, காரில் வந்த தவெகவினரையும் அவர்கள் கொண்டு வந்த உணவுப் பொருட்களையும் அங்கிருந்து திருப்பி அனுப்பினர்.
இந்தச் சம்பவத்தால் சமயபுரம் பகுதியில் சிறிது நேரம் கடும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது.
