இலவச ஆயுள் காப்பீடு: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்யவரும் பக்தர்களுக்கு எல்.ஐ.சி. நிறுவனத்துடன் இணைந்து ரூ. 2 இலட்சம் மதிப்பிலான இலவசக் குழு காப்பீட்டுத் திட்டத்தை ஆந்திரப் முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்துள்ளார். பிரீமியம் தொகையைத் தேவஸ்தானமே செலுத்துகிறது.
பக்தி அனுபவ புத்துணர்வு மையம்: வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் மெய்நிகர் யதார்த்தம் (VR) தொழில்நுட்பத்துடன் கூடிய ஹீலிங் மற்றும் பக்தி அனுபவ மையம் அமைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவாரி ரதம் இலவசப் பேருந்துகள்: பக்தர்களின் வசதிக்காக நன்கொடையாகப் பெறப்பட்ட 32 புதிய மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன; இதன் மூலம் திருமலையில் இயக்கப்படும் இலவசப் பேருந்துகளின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.
புதுப்பிக்கப்பட்ட அருங்காட்சியகம்: டி.சி.எஸ். நிறுவனத்துடன் இணைந்து அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட 1 லட்சம் சதுர அடி பரப்பளவிலான ஸ்ரீ வெங்கடேஸ்வர அருங்காட்சியகமும் திறந்து வைக்கப்பட்டது.
விரிவானச் செய்தி:
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு உலகெங்கிலும் இருந்து வருகை தரும் பக்தர்களுக்குச் சிறந்த ஆன்மீகச் சேவைகள் மற்றும் அதிநவீன வசதிகளை வழங்கும் நோக்கில், பல்வேறு புதிய திட்டங்களைத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) சார்பில் ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் நாரா சந்திரபாபு நாயுடு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.
ரூ. 2 லட்சம் இலவச ஆயுள் காப்பீட்டுத் திட்டம்:
திருப்பதிக்குச் சாமி தரிசனத்திற்காக வரும் சாதாரண மற்றும் அனைத்துப் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் எல்.ஐ.சி. (LIC) நிறுவனத்துடன் இணைந்து புதிய குழு காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, பக்தர்களோ அல்லது ஸ்ரீவாரி சேவகர்களோ எந்தவிதமான பிரீமியமும் செலுத்தத் தேவையில்லை; முழுப் பிரீமியத் தொகையையும் தேவஸ்தானமே செலுத்துகிறது. எல்.ஐ.சி. குரூப் டேர்ம் ஈஸ் திட்டத்தின் கீழ் பக்தர்கள் நான்கு நாட்கள் வரை காப்பீட்டுப் பாதுகாப்பைப் பெறுவார்கள்.
மேலும், காப்பீட்டுக் கோரிக்கை நடைமுறைகள் முற்றிலும் ஆன்லைன் மற்றும் காகிதமில்லா முறைக்கு மாற்றப்பட்டுள்ளதற்காக தேவஸ்தானம் சார்பில் ரூ. 2.12 கோடி முன்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
பக்தி அனுபவ தியான புத்துணர்வு மையம்:
வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ்-1 இன் 17-வது அறையில், தரிசனத்திற்காகக் காத்துிருக்கும் பக்தர்கள் தங்கள் நேரத்தை ஆன்மீக ரீதியில் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் ‘ஹீலிங் மையம்’ அமைக்கப்பட்டுள்ளது. இ
தில் செயற்கை நுண்ணறிவு மற்றும் மெய்நிகர் யதார்த்த (VR) தொழில்நுட்பத்தின் மூலம் திருமலையின் வரலாறு மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் மகிமைகள் 3D மற்றும் 360 டிகிரி காட்சிகளாக ஒளிபரப்பப்படுகின்றன.
சுப்ரபாதம், தோமலை சேவை, அபிஷேகம் போன்ற சிறப்புச் சேவைகளை பக்தர்கள் தொழில்நுட்பத்தின் மூலம் அருகில் பார்ப்பது போன்ற அனுபவத்தைப் பெறலாம். விரைவில் இது அனைத்துக் க்யூ காம்ப்ளக்ஸுகளுக்கும் நேரலையாக விரிவுபடுத்தப்பட உள்ளது.
‘ஸ்ரீவாரி ரதம்’ இலவசப் பேருந்து சேவை:
திருமலையில் பக்தர்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (25 பேருந்துகள்) மற்றும் பாரத் பயோடெக் ஃபவுண்டேஷன் (7 பேருந்துகள்) ஆகியவைகளிடமிருந்து நன்கொடையாகப் பெறப்பட்ட 32 புதிய மின்சாரப் பேருந்துகள் கொடியசைத்துத் தொடங்கி வைக்கப்பட்டன.
இதன் மூலம் திருமலையில் இலவசப் பேருந்துகளின் எண்ணிக்கை 18-ல் இருந்து 50 ஆகவும், மின்சாரப் பேருந்துகள் 14-ல் இருந்து 44 ஆகவும் அதிகரித்துள்ளது. முக்கிய வழித்தடங்களில் ஒவ்வொரு 3 நிமிடங்களுக்கும் ஒரு பேருந்து என தினமும் 810 முறை பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அதிநவீன ஸ்ரீ வெங்கடேஸ்வர அருங்காட்சியகம்:
1998ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஸ்ரீ வெங்கடேஸ்வர அருங்காட்சியகம், டி.சி.எஸ். (TCS) நிறுவனத்தின் உதவியுடன் அதிநவீன தொழில்நுட்பத்தில் முழுமையாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
சுமார் ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவில், 4 தளங்களில் 14 சிறப்புக் காட்சியகங்கள் அமைக்கப்பட்டு 8,000-க்கும் மேற்பட்ட அரியப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
ஏழுமலையானின் ஆபரணங்கள், செப்புத் தகடுகள், அரிய நாணயங்கள் மற்றும் பூஜை பொருட்கள் போன்றவை முப்பரிமாணக் காட்சிகள் மற்றும் டிஜிட்டல் ஆவணக்காப்பக முறையில் பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்ச்சியில் எல்.ஐ.சி. மற்றும் டி.சி.எஸ். நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுடன் மாநில அமைச்சர்கள் மற்றும் தேவஸ்தானத்தின் முக்கிய அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
