உலகப் புகழ்பெற்ற சென்னை மெரினா கடற்கரையைச் தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், நமது கடற்கரையைத் நாமே சுத்தம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது மிகவும் வருத்தமளிப்பதாகத் தெரிவித்தார். உலகக் கடற்கரை தூய்மை தினத்தை ஒட்டி மெரினா கடற்கரையில் நடைபெற்ற தூய்மைப் பணியில் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுடன் இணைந்து அவர் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
“இளைஞர்களே நமக்குச் செய்தி சொல்லியிருக்கிறார்கள்” – ஆளுநர் உரை
நிகழ்ச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கூறியதாவது, “இன்று உலகப் புகழ்பெற்ற நமது மெரினா கடற்கரையில் நாம் அனைவரும் ஒன்று கூடியிருக்கிறோம். உண்மையில், நமது கடற்கரையைச் சுத்தம் செய்வதற்காக நாம் இங்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. நமது கடற்கரை, நமது சுற்றுப்புறம், நமது உடைமைகள், நமது வீடுகள் என அனைத்தையும் தூய்மையாக வைத்திருப்பது நமது இயல்பான பழக்கமாகவே இருந்திருக்க வேண்டும்.

இன்றைய நாளில் நான் இங்கு எந்தச் செய்தியையும் வழங்குவதற்காக வரவில்லை. இங்கு கூடியிருக்கும் நமது இளைஞர்களும், மாணவர்களும் ஏற்கனவே தூய்மைப் பணியைத் தொடங்கி நமக்கு ஒரு செய்தியை வழங்கியுள்ளனர்; இப்படித்தான் இதைச் செய்ய வேண்டும் என்பதை அவர்கள் நமக்கு எடுத்துக்காட்டியுள்ளனர். நானும் உள்பட நாம் அனைவரும் இதைப் பின்பற்ற வேண்டும்.”

“இது நமது பொறுப்பு” – ஆளுநர் தலைமையில் தூய்மை உறுதிமொழி
தொடர்ந்து பேசிய அவர், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது அரசின் கடமை மட்டுமல்லாமல் ஒவ்வொரு குடிமகனின் தனிப்பட்ட பொறுப்பு என்பதை வலியுறுத்தினார்.
இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், “நமது கடற்கரையைத் தூய்மைப்படுத்துவதற்காக இங்கு கூடியிருக்கும் அனைத்து இளைஞர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதற்காக அரசு, அரசு அதிகாரிகள் அல்லது ராஜ்பவனில் இருந்து யாராவது வந்து நமக்குச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ‘இதைத் தூய்மையாக வைத்திருப்பது என்னுடைய பொறுப்பு’ என்ற எண்ணம் நம் அனைவருக்கும் இருக்க வேண்டும்.
இங்கு இருக்கும் அனைவருமே இளைஞர் தலைவர்கள்தான். அவர்கள் நமக்கு வழியைக் காட்டியிருக்கிறார்கள். இதை ஒரு பழக்கமாக மாற்றிக்கொண்டு, ஒவ்வொரு நாளும் நாம் தூய்மைப் பணியை மேற்கொள்வோம் என்று இன்று நாம் அனைவரும் ஒரு உறுதிமொழி எடுத்துக்கொள்வோம்” எனத் தெரிவித்தார்.

மெரினாவில் களைகட்டிய தூய்மைப் பணி
ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரின் இந்த அழைப்பை ஏற்று, மெரினா கடற்கரையைத் தூய்மைப்படுத்தும் பணியில் ஏராளமான கல்லூரி மாணவர்களும், இளைய தலைமுறையினரும் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். பொதுமக்களிடையே தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்வு அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.
