சென்னையை அடுத்த முள்ளிக்குப்பம் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்காகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, வரும் செப்டம்பர் 29-ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மயிலை பகுதி அனைத்து மீனவ கிராம பஞ்சாயத்துகள் கூட்டாக அறிவித்துள்ளன.
மீனவ கிராம பஞ்சாயத்துகளின் அவசரக் கலந்தாய்வுக் கூட்டம்
முள்ளிக்குப்பம் சமூக நலக்கூடத்தில் மயிலை பகுதி அனைத்து மீனவ கிராம பஞ்சாயத்து சபைகளின் அவசரக் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் புதிய தலைமைச் செயலகத் திட்டம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டு முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அரசாணை எண் 564-ஐ ரத்து செய்யக் கோரிக்கை:
தமிழக அரசின் பொதுப்பணித் துறை சார்பில் கடந்த செப்டம்பர் 8 அன்று வெளியிடப்பட்ட அரசாணை எண் 564-ன் படி, முள்ளிக்குப்பம் பகுதியில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய சட்டமன்ற மற்றும் தலைமைச் செயலக வளாகம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் மக்களுக்கு எவ்வித முன்னறிவிப்பும் இன்றி வெளியிடப்பட்ட இந்த அரசாணையை அரசு முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
பாரம்பரிய குடியிருப்புப் பகுதியாக அறிவிக்க வேண்டும்:
இப்பகுதி நிலமானது மெட்ராஸ் சிட்டி இம்ப்ரூவ்மென்ட் டிரஸ்ட் (MCIT) மூலம் மீனவர்களுக்குக் குடியிருப்பு அமைத்துத் தருவதற்காகவே கையகப்படுத்தப்பட்ட நிலமாகும். எனவே, இதனைத் தலைமைச் செயலகத்திற்குக் குத்தகைக்கு விடுவதை விடுத்து, மீனவர்களின் நீண்டகாலக் குடியிருப்புப் பகுதியாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துத் தனி அரசாணை வெளியிட வேண்டும்.
செப்டம்பர் 29-இல் கண்டன ஆர்ப்பாட்டம் – அதிரடி முடிவு:
தாங்கள் விடுத்த கோரிக்கைகளுக்கு அரசு தரப்பிலிருந்து உரிய கால அவகாசத்திற்குள் எந்தவித பதிலும் வராததால், மீனவர்களின் பாரம்பரிய உரிமையையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் பொருட்டு, சென்னை மாவட்டத்திலுள்ள அனைத்து மீனவ கிராமங்களையும் ஒருங்கிணைத்து வரும் செப்டம்பர் 29 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தலைநகரின் முக்கிய இடத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் அரசுத் திட்டத்திற்கும், மீனவ சமுதாயத்தின் வாழ்வாதாரப் போராட்டத்திற்கும் இடையே வெடித்துள்ள இந்த விவகாரம் அரசியல் மற்றும் சமூக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
