தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் திடீர் மின்வெட்டு மற்றும் வோல்டேஜ் ஏற்ற இறக்கங்கள் பெருமளவு அதிகரித்து பொதுமக்களைப் படுத்தி எடுத்து வருகிறது. குறிப்பாக, இரவு நேரங்களில் அடுத்தடுத்து 1 மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை தொடரும் மின்வெட்டால் அவதிப்படும் மக்கள் ஆத்திரமடைந்து சாலை மறியல் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரம் அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளும், தவெக மீதும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.
பொதுமக்களின் தொடர் புகார்களை அடுத்து, நிலைமையைச் சரிசெய்யும் பொருட்டு கடந்த 23ஆம் தேதி சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்திற்கு நேரில் சென்று முதலமைச்சர் விஜய் அதிரடி ஆய்வு மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சரின் ஆய்வும் அதிகாரிகளுடன் ஆலோசனையும்
மின்வாரியத் தலைமை அலுவலகத்திற்குச் சென்ற முதல்வர் விஜய், அங்குள்ள ‘மின்னகம்’ மற்றும் மாநில மின் பளு பகிர்ந்தளிப்பு மையத்தை (State Load Despatch Centre) நேரடியாகப் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
அப்போது அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்த முக்கிய விவரங்கள்:
தமிழகத்தில் நிலவும் தற்போதைய மின் உற்பத்தி மற்றும் மின்தேவை (Power Demand) நிலவரம் என்ன?
திடீர் மின் தடையின் போது பொதுமக்களுக்கு உடனுக்குடன் உதவ எடுக்கப்படும் அவசர கால நடவடிக்கைகள் எவை?
மின்வெட்டுப் புகார்களுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என முதல்வர் கண்டிப்புடன் உத்தரவிட்டிருந்த போதிலும், களத்தில் நிலைமை மாறவில்லை என்பதற்கு நேற்றைய நிகழ்வுகள் அத்தாட்சியாக அமைந்துள்ளன.
அமைச்சர்கள் கூட்டத்திலேயே அடுத்தடுத்து அரங்கேறிய மின்தடை
முதலமைச்சர் மின்வாரிய அலுவலகத்தில் ஆய்வு செய்து சில நாட்களே ஆன நிலையில், நேற்று ஒரே நாளில் தமிழக அமைச்சர்கள் கலந்துகொண்ட இரண்டு முக்கியமான அரசியல் கூட்டங்களில் அடுத்தடுத்து மின்வெட்டு ஏற்பட்டுள்ளது ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையும் சங்கடத்திற்குள்ளாக்கியுள்ளது.
தாராபுரத்தில் சலசலப்பு
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, தவெக சார்பில் பிரம்மாண்டமான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், அருண்ராஜ், விஜய் பாலாஜி, பர்வேஸ், காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ்குமார் மற்றும் கட்சியில் புதிதாக இணைந்த முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஆனந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் மூத்த அமைச்சர் செங்கோட்டையன் உரையாற்றிக் கொண்டிருந்தபோது திடீரென மின் தடை ஏற்பட்டது. இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் கூச்சலும் சலசலப்பும் நிலவியது; பின்னர் மின்சாரம் வந்த பிறகே அவர் தனது உரையைத் தொடர்ந்தார்.
செங்கல்பட்டில் ஜெனரேட்டர் அவலம்
இதேபோல், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் இடைத்தேர்தல் பணிகளுக்காகத் தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் பூத் முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. தவெக வேட்பாளர் மரதகம் குமரவேலை ஆதரித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஏற்பட்ட மின்தடையால் அரங்கு இருளில் மூழ்கியது. உடனடியாக ஜெனரேட்டர் இயக்கப்பட்டு மின்சாரம் வரவழைக்கப்பட்ட பின்னரே கூட்டம் தொடர்ந்தது.
எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனம்
பொதுமக்கள் வீதிகளில் இறங்கிப் போராடும் அளவுக்கு மாநிலத்தில் மின்தடைப் பிரச்சினை தலைவிரித்தாடும் நிலையில், அமைச்சர்கள் பங்கேற்கும் கூட்டங்களிலேயே கரண்ட் கட் ஆவது சமூக வலைத்தளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் பேசுபொருளாகியுள்ளது. முதலமைச்சரின் நேரடி ஆய்வுக்குப் பிறகும் மின்வாரியத்தின் செயல்பாடுகளில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை என்பதை இந்தச் சம்பவங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
