திரைப்படத்திற்காகப் பெறப்பட்ட ரூ.40 லட்சம் முன்பணத்தைத் திருப்பிக் கொடுக்காதது தொடர்பான புகாரில், பிரபல நடிகர் ராஜ்கிரணுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதன்படி அவர் 15 நாட்களுக்குச் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகிக் கையெழுத்திட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வழகின் பின்னணி மற்றும் தயாரிப்பாளர் புகார்
சென்னையை அடுத்த மீஞ்சூரில் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வரும் சரவணன் என்பவர், கடந்த 2022-ஆம் ஆண்டு புதிய திரைப்படம் தயாரிப்பதற்காக நடிகர் ராஜ்கிரணுக்கு ரூ.50 லட்சம் முன்பணமாக வழங்கியுள்ளார். ஆனால், அதன்பிறகு படத் தயாரிப்புப் பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை. இதனால் பணத்தைத் திருப்பிக் கொடுக்குமாறு தயாரிப்பாளர் சரவணன் நடிகர் ராஜ்கிரணிடம் கோரியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, நடிகர் சங்க மற்றும் தயாரிப்பாளர் சங்கப் பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில், கடந்த 2025-ஆம் ஆண்டு ரூ.10 லட்சத்தை ராஜ்கிரண் திருப்பி அளித்துள்ளார். மீதமுள்ள ரூ.40 லட்சத்தைத் திருப்பித் தராமல் மோசடி செய்துவிட்டதாகக் கூறி தயாரிப்பாளர் சரவணன் கடந்த 2025 செப்டம்பரில் மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பொன்னேரி மாஜிஸ்திரேட் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி நடிகர் ராஜ்கிரண் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.
உயர் நீதிமன்றத்தில் ராஜ்கிரண் தரப்பு வாதம்
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி நடிகர் ராஜ்கிரண் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
காலதாமதமும் உரிமையியல் வழக்கும்: படம் தயாரிப்பது தொடர்பாக 2022-ஆம் ஆண்டில் ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில், சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இயல்பாக இதுவொரு உரிமையியல் (Civil) வழக்கு ஆகும், ஆனால் இதற்குத் தற்போது குற்றவியல் (Criminal) வழக்காகச் சாயம் பூசப்பட்டுள்ளது.
தப்பியோட மாட்டேன்: தமிழகத் திரைப்பட ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான மற்றும் மூத்த நடிகரான தான், இந்த வழக்கை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும், எங்குமே தப்பி ஓடிவிட மாட்டேன் என்றும் தனது மனுவில் நடிகர் ராஜ்கிரண் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரமேஷ், இரு தரப்பு வாதங்களையும் கருத்தில் கொண்டு நடிகர் ராஜ்கிரணுக்கு நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ராஜ்கிரண் 15 நாட்களுக்கு ஒருமுறை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி சர்ச்சை பேச்சு: நடிகர் மன்சூர் அலிகான் மீதான வழக்கு ரத்து!
