தமிழ்நாட்டில் மகளிருக்கான விரிவுபடுத்தப்பட்ட கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டமான ‘வெற்றிப் பயணம்’ திட்டம் நாளை (அக்டோபர் 2) முதல் நடைமுறைக்கு வருகிறது. இதையொட்டி, முதலமைச்சர் விஜய் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு திட்டம் தொடர்பான தகவல்களை தெரிவித்துள்ளார்.


மகளிருக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் கட்டணமில்லா பேருந்து பயண வசதியை விரிவுபடுத்தும் வகையில் ‘வெற்றிப் பயணம்’ திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் அக்டோபர் 2-ம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் விஜய் கடந்த ஆகஸ்ட் மாதம் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.
நாளை முதல் ‘வெற்றிப் பயணம்’
முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள வீடியோ மற்றும் சமூக வலைதளப் பதிவில், தமிழ்நாட்டில் உள்ள பாட்டிகள், அம்மாக்கள், அக்காக்கள், தங்கைகள், பெண் குழந்தைகள் உள்ளிட்ட மகளிருக்கு கட்டணமில்லா ‘வெற்றிப் பயணம்’ திட்டம் அக்டோபர் 2 முதல் தொடங்கும் என்று தெரிவித்துள்ளார். திருநங்கைகளும் இத்திட்டத்தின் மூலம் பயனடையலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
12,692 பேருந்துகளில் இலவச பயணம்
இந்த விரிவுபடுத்தப்பட்ட திட்டத்தின் கீழ் மாநகரம் மற்றும் நகரப் பகுதிகளில் இயக்கப்படும் சாதாரண அரசு பேருந்துகள் மட்டுமின்றி, எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ். மற்றும் டீலக்ஸ் பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்யலாம்.
மேலும், மாவட்டங்களுக்கு இடையேயான பயணத்துக்கு புறநகர் சாதாரண பேருந்துகள் மற்றும் குறிப்பிட்ட மலைப்பகுதி சாதாரண பேருந்துகளிலும் இந்த வசதி வழங்கப்பட உள்ளது.
மொத்தம் 12,692 அரசு பேருந்துகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமும் 84.32 லட்சம் பெண்கள் பயன்பெறுவார்கள்
அரசின் கணக்கீட்டின்படி, ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தின் மூலம் தினமும் சுமார் 84.32 லட்சம் பெண் பயணிகள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் வருமான உச்சவரம்பு அல்லது ஒருவர் மேற்கொள்ளும் பயணங்களின் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடு இருக்காது என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
மாணவிகள், பணிபுரியும் பெண்களுக்கு பயன்
கல்வி நிலையங்களுக்கு செல்லும் மாணவிகள், வேலைக்குச் செல்லும் பெண்கள் மற்றும் மருத்துவமனைகளுக்குச் செல்லும் பெண்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் உதவியாக இருக்கும் என அரசு தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தை பிற சேவைகளுக்கும் படிப்படியாக விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு ரூ.6,000 கோடி செலவு
‘வெற்றிப் பயணம்’ திட்டத்தை செயல்படுத்த ஆண்டுக்கு தோராயமாக ரூ.6,000 கோடி செலவாகும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் மகளிருக்கு பொதுப் போக்குவரத்து வசதியை விரிவுபடுத்துவதே திட்டத்தின் நோக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 2 முதல் திட்டம் நடைமுறைக்கு வர உள்ள நிலையில், அதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனிடையே, திட்டம் தொடர்பான தகவல்களை விளக்கும் வகையில் முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
