நடிகை ஜான்வி கபூரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் மார்பிங் செய்து, ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்பிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஜான்வி கபூர் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடித்த ‘தேவரா’ திரைப்படத்தின் ‘சுட்டமல்லே’ பாடல் காட்சிகளை பயன்படுத்தி, அவரது உருவத்தை மாற்றி ஆபாசமான வீடியோ உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
ஹைதராபாத் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு
இந்த விவகாரம் தொடர்பாக ஹைதராபாத் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். வீடியோவை உருவாக்கியவர்கள் யார், எந்த கணக்குகளில் இருந்து முதலில் பதிவேற்றம் செய்யப்பட்டது, பின்னர் எந்தெந்த சமூக வலைதள கணக்குகள் மூலம் பரப்பப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் பரப்பப்படும் இதுபோன்ற இணைப்புகளை முடக்குவதற்காக சம்பந்தப்பட்ட சமூக வலைதள நிறுவனங்களுக்கும் தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், பதிவுகளின் ஐ.பி. முகவரிகளை வைத்து குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியும் நடைபெற்று வருகிறது.
ஜூனியர் என்.டி.ஆர். கடும் கண்டனம்
இந்த சம்பவத்திற்கு ஜான்வி கபூரின் ‘தேவரா’ பட சக நடிகரான ஜூனியர் என்.டி.ஆர். கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஏ.ஐ. தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி ஒரு பெண்ணை அவமதிக்கும் வகையில் வீடியோ உருவாக்குவது மிகவும் கேவலமான செயல் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், வீடியோவை உருவாக்கியவர்கள் மட்டுமின்றி அதை உருவாக்கி பரப்பியவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
ஜான்வி கபூர் வெளியிட்ட அதிரடி பதிவு
இந்த விவகாரம் குறித்து ஜான்வி கபூரும் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். பெண்களை பொருளாக சித்தரித்து, அவர்களின் சம்மதம் இல்லாமல் கற்பனையான உள்ளடக்கங்களை உருவாக்கி பரப்புவது மிகவும் மோசமான செயல் என்றும், இது பாலியல் வன்கொடுமைக்கு நெருக்கமானதாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு பெண்ணின் உடல், தனிப்பட்ட எல்லைகள் மற்றும் சம்மதம் ஆகியவற்றுக்கு மதிப்பளிப்பது அடிப்படை மனிதநேயமாக இருக்க வேண்டும் என்றும் ஜான்வி கபூர் வலியுறுத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் தனக்கு ஆதரவாக குரல் கொடுத்த ஜூனியர் என்.டி.ஆர்., சிரஞ்சீவி, விஜய் தேவரகொண்டா மற்றும் குஷ்பு சுந்தர் உள்ளிட்டோருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் வளர்ச்சியுடன் இதுபோன்ற டீப்ஃபேக் மற்றும் மார்பிங் உள்ளடக்கங்களின் தவறான பயன்பாடும் அதிகரித்து வருவதால், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
விமர்சனங்களைப் பற்றி கவலைப்படாதீர்கள்: ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் அறிவுரை!
