நடிகர் சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கத்தின் மூன்றாம் ஆண்டு நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சென்னை போரூர் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கத்தின் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய மற்றும் பகுதி நிர்வாகிகள் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசிய காணொளி தற்போது வெளியாகியுள்ளது. அதில் நற்பணி இயக்கத்தின் நோக்கம் குறித்தும், நிர்வாகிகள் பின்பற்ற வேண்டிய விஷயங்கள் குறித்தும் அவர் பல்வேறு கருத்துகளை பகிர்ந்துகொண்டார்.

யாருக்கும் போட்டியாகவோ, எதிராகவோ இந்த அமைப்பு இல்லை
நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், இந்த அமைப்பின் முக்கிய நோக்கம் தங்களால் முடிந்த உதவிகளை அனைவருக்கும் செய்வதுதான் என தெரிவித்தார். யாருக்கும் போட்டியாகவோ அல்லது யாரையும் எதிர்க்கவோ இந்த அமைப்பு உருவாக்கப்படவில்லை என்பதை நிர்வாகிகள் அனைவரும் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம்
உடல் ஆரோக்கியம்தான் வாழ்க்கையில் மிகப்பெரிய விஷயம் என்பதை உணர்ந்து அனைவரும் தங்களது உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் சிவகார்த்திகேயன் அறிவுறுத்தினார்.
மேலும், நன்றாக உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்றும், சம்பாதிக்கும் பணத்தில் முதலில் தங்களது குடும்பத்தை கவனித்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
நாள்தோறும் நற்பணி செய்வோம்
நற்பணி என்பதை ஓரிரு நாட்கள் மட்டும் செய்து முடித்துவிடாமல், தொடர்ந்து செய்ய வேண்டும் என சிவகார்த்திகேயன் வலியுறுத்தினார். “நாள்தோறும் நற்பணி செய்வோம்” என்ற அடிப்படையில் ஆண்டு முழுவதும், 365 நாட்களும் குறைந்தபட்சம் 10 பேருக்காவது உதவி செய்து வருவதை தான் கவனித்து வருவதாகவும், அது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து நற்பணியில் ஈடுபட்டு வரும் நிர்வாகிகளுக்கு தனது மனமார்ந்த பாராட்டுகளையும் சிவகார்த்திகேயன் தெரிவித்தார்.
தினமும் புத்தகம் படிக்க வேண்டும்
நிர்வாகிகள் அனைவரும் ஒரு நாளில் குறைந்தபட்சம் 10 நிமிடங்களாவது புத்தகம் படிக்க வேண்டும் என்றும் சிவகார்த்திகேயன் கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் புத்தகக் கண்காட்சியும் அமைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்து முதல் புத்தகத்தை சிவகார்த்திகேயன் பெற்றுக்கொண்டார்.
இரண்டு படங்களும் ஜனரஞ்சகமான பொழுதுபோக்கு படங்களாக இருக்கும்
தற்போது இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் “சேயோன்” திரைப்படத்திலும், இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் மற்றொரு திரைப்படத்திலும் நடித்து வருவதாக சிவகார்த்திகேயன் தெரிவித்தார்.
இந்த இரண்டு திரைப்படங்களும் ஜனரஞ்சகமான பொழுதுபோக்கு திரைப்படங்களாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நிர்வாகிகளுடன் தனித்தனியாக புகைப்படம்
கலந்துரையாடலை முடித்த பின்னர், நிகழ்ச்சியில் பங்கேற்ற நிர்வாகிகள் அனைவருடனும் சிவகார்த்திகேயன் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
தொடர்ந்து அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், உணவருந்திய நிர்வாகிகள் மகிழ்ச்சியுடன் நிகழ்ச்சியை நிறைவு செய்து சென்றனர்.
“சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் எனக்கு தொடர்பில்லை” – நடிகை ரகுல் ப்ரீத் சிங் விளக்கம்!
