Homeசெய்திகள்மாவட்டம்15ஆம் தேதி ஆகியும் சம்பளம் இல்லை! சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம்!

15ஆம் தேதி ஆகியும் சம்பளம் இல்லை! சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம்!

-

- Advertisement -

சேலம் மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு கடந்த மாதத்திற்கான சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை எனக் கூறி, 200-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இன்று பணிக்குச் செல்லாமல் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.15ஆம் தேதி ஆகியும் சம்பளம் இல்லை! சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம்!

உடனடியாக சம்பளம் வழங்க வேண்டும் என்றும், தங்களது நீண்டகாலக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

we-r-hiring

2,000-க்கும் மேற்பட்ட ஒப்பந்தப் பணியாளர்கள்

சேலம் மாநகராட்சியில் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாதந்தோறும் தனியார் நிறுவனம் மூலம் சம்பளம் வழங்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அக்டோபர் 15ஆம் தேதி ஆகியும் கடந்த மாதத்திற்கான சம்பளம் வழங்கப்படவில்லை எனப் பணியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதனால், அத்தியாவசியத் தேவைகளுக்குக்கூட பணமின்றி சிரமப்படுவதாகத் தெரிவித்த அவர்கள், இன்று காலை பணிக்குச் செல்லாமல் சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பணி நிரந்தரம், ஊதிய உயர்வு கோரிக்கைகள்

ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக ஏற்கெனவே பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், தற்போது வழங்கப்பட்டு வரும் ஊதியமும் உரிய நேரத்தில் கிடைக்கவில்லை எனக் கூறி அவர்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர். சம்பளம் தாமதமின்றி வழங்கப்பட வேண்டும் என்றும், தங்களது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு; எங்களுக்கு சம்பளம்கூட இல்லை!

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள் பேசுகையில், டாஸ்மாக் பணியாளர்களுக்கு உடனடியாக ஊதிய உயர்வு வழங்கப்படுவதாகவும், ஆனால் பொதுமக்கள் தூக்கி எறியும் மதுபாட்டில்கள் மற்றும் போதையில் இருப்பவர்கள் வாந்தி எடுப்பது உள்ளிட்ட அசுத்தங்களைச் சுத்தம் செய்யும் தங்களுக்கு ஊதிய உயர்வும் கிடைக்கவில்லை, சம்பளமும் உரிய நேரத்தில் வழங்கப்படவில்லை என்றும் வேதனையுடன் தெரிவித்தனர்.

மாநகரின் தூய்மையைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் தங்களது வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடரும் போராட்டத்தால் பரபரப்பு

சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து 200-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சம்பளப் பிரச்சினைக்கு எப்போது தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் பணியாளர்கள் உள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து மாநகராட்சி நிர்வாகமும் சம்பளம் வழங்கும் தனியார் நிறுவனமும் உரிய நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இன்ஸ்டாகிராம் நட்பால் விபரீதம்? ரூ.3 லட்சம் ஆன்லைன் கடன் வாங்கிக் கொடுத்த இளம்பெண் தற்கொலை – தாம்பரத்தில் சோகம்!

MUST READ