சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரி, தமிழக சட்டமன்றத்தில் கடந்த செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த மனு, சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வில் வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.

2006-ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் செயலாளர் எஸ். அறிவழகன் தாக்கல் செய்துள்ள மனுவில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரி, கடந்த 2006-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தீர்மானம் மறுநாளே ஆளுநரின் பரிந்துரையுடன் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், சென்னை உயர்நீதிமன்றமும் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பே இந்தக் கோரிக்கைக்குக் கொள்கை ரீதியாக ஆதரவு தெரிவித்திருந்ததாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இருப்பினும், அரசியலமைப்புச் சட்ட நடைமுறையின்படி அந்தத் தீர்மானம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படவில்லை என மனுதாரர் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 3-ஆம் தேதி மீண்டும் தீர்மானம்
தமிழகத்தில் தற்போதைய அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதி சட்டமன்றத்தில் மீண்டும் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற நீண்டகாலக் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் மாநிலத்தின் அலுவல் மொழியை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக அறிவிக்க வழிவகை இருப்பதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அல்லது உச்சநீதிமன்றத்தின் முழு அமர்வின் ஒப்புதலைப் பெறுவது அரசியலமைப்புச் சட்டத்தின்படி கட்டாயம் எனக் குறிப்பிடப்படவில்லை என்றும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
1965-ஆம் ஆண்டு மத்திய அமைச்சரவையின் முடிவுக்கு எதிர்ப்பு
கடந்த 1965-ஆம் ஆண்டு மே மாதம், உயர்நீதிமன்றங்களில் மாநில மொழிகளை வழக்காடு மொழியாகப் பயன்படுத்துவது தொடர்பாக மத்திய அமைச்சரவை சில முடிவுகளை எடுத்ததாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாநில மொழியை வழக்காடு மொழியாகப் பயன்படுத்துவதற்கான கோரிக்கையை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்புவதற்கு முன்பாக, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அல்லது உச்சநீதிமன்றத்தின் முழு அமர்வின் ஒப்புதலைப் பெற வேண்டும் என முடிவு செய்யப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து உயர்நீதிமன்றங்களிலும் இந்தியை வழக்காடு மொழியாக அமல்படுத்தும் வரை ஆங்கிலத்தையே பயன்படுத்த வேண்டும் என்றும், மாநில மொழிகளை உயர்நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாகப் பயன்படுத்தக் கூடாது என்றும் அப்போது முடிவெடுக்கப்பட்டதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நடைமுறையை மாற்றியமைக்க வேண்டும் எனக் கோரியுள்ள மனுதாரர், மாநில மொழிகளை உயர்நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாகப் பயன்படுத்துவது தொடர்பாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அல்லது முழு அமர்வின் ஒப்புதலைக் கட்டாயமாக்கிய 1965-ஆம் ஆண்டு மத்திய அமைச்சரவையின் முடிவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
பிற மாநிலங்களில் இந்தி வழக்காடு மொழி
ராஜஸ்தானில் 1950-ஆம் ஆண்டிலும், உத்தரப்பிரதேசத்தில் 1969-ஆம் ஆண்டிலும், மத்தியப் பிரதேசத்தில் 1971-ஆம் ஆண்டிலும், பீகாரில் 1972-ஆம் ஆண்டிலும் உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆங்கிலம் வழக்காடு மொழியாக இருப்பதால், பொதுமக்கள் தங்களது வழக்குகளின் விவரங்களைப் புரிந்துகொள்வதிலும், வழக்கறிஞர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்குவதிலும் சிரமங்களை எதிர்கொள்வதாக மனுதாரர் தெரிவித்துள்ளார். எனவே, பொதுமக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரிக்கை
தமிழக சட்டமன்றத்தில் கடந்த செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்காக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கும் கோரிக்கை தொடர்பான இந்த வழக்கு, வரும் திங்கட்கிழமை தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வரவுள்ளதால், அதன் மீதான நீதிமன்றத்தின் நிலைப்பாடு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
சாலை சீரமைப்புப் பணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்! சென்னை மாநகராட்சி அதிரடி அறிவிப்பு!
