ஒரு காலில் நின்றபடி 50 வகையான யோகாசனங்களைத் தொடர்ந்து செய்து கோவையைச் சேர்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவி சஞ்சனா உலக சாதனை படைத்துள்ளார். சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்து மாணவி அசத்தியுள்ளார்.


கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்த சுரேஷ் குமார் – உஷா லட்சுமி தம்பதியினரின் மகள் சஞ்சனா. ஐந்தாம் வகுப்பு படித்து வரும் இவர், சிறு வயது முதலே யோகாசனம் செய்வதில் ஆர்வம் கொண்டிருந்தார்.
இந்நிலையில், ஒற்றைக் காலில் நின்றபடி பல்வேறு யோகாசனங்களைச் செய்து பயிற்சி மேற்கொண்டு வந்த மாணவி சஞ்சனா, தற்போது 50 வகையான யோகாசனங்களைத் தொடர்ந்து செய்து உலக சாதனை படைத்துள்ளார்.
50 வகையான யோகாசனங்கள் செய்து சாதனை!
பிரேவ் ஃபிட் அகாடமியில் பயிற்சி பெற்று வரும் மாணவி சஞ்சனா, உடல் சமநிலை, மன ஒருமைப்பாடு மற்றும் உடல் கட்டுப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் விருட்சாசனம், நடராஜாசனம், வீரபத்ராசனம் உள்ளிட்ட 50 வகையான ஆசனங்களை ஒரு காலில் நின்றபடி தொடர்ந்து செய்து சாதனை படைத்துள்ளார்.
இதன் மூலம் சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்து கோவைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி பாராட்டு!
இந்தச் சாதனை நிகழ்ச்சியை பிரேவ் ஃபிட் அகாடமியின் நிறுவனர் மற்றும் சோழன் உலக சாதனைப் புத்தகத்தின் கோவை மாவட்டத் தலைவருமான பாலமுரளிகிருஷ்ணன் கண்காணித்தார்.

சாதனையை நிகழ்த்திய மாணவி சஞ்சனாவுக்கு சோழன் உலக சாதனைப் புத்தகத்தின் சான்றிதழ் மற்றும் பதக்கத்தை வழங்கி அவர் கவுரவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் ஆஃப் கோவை மிட் டவுன் செயலாளர் கண்ணன் பாபு, சோழன் உலக சாதனைப் புத்தகத்தின் கோவை மாவட்டச் செயலாளர் திலகவதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாணவியின் சாதனையைப் பாராட்டினர்.
சிறு வயதிலேயே யோகாசனத்தில் ஆர்வம் காட்டி, உடல் மற்றும் மன உறுதியை வெளிப்படுத்தி உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த மாணவி சஞ்சனாவுக்குப் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
