புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே, சுமார் 80 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தீபாவளிப் பரிசுத் தொகுப்பு வழங்கி வருவது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு சுமார் 62 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். இதையடுத்து விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்கிடையே, தமிழக வெற்றிக் கழகத் தலைமை சி. விஜயபாஸ்கருக்கு மாவட்ட அமைப்புச் செயலாளர் மற்றும் விராலிமலை சட்டமன்றத் தொகுதி மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வழங்கியுள்ளது. இடைத்தேர்தலில் தவெக சார்பில் மீண்டும் அவருக்கே போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
பொங்கல் சீர் வழங்குவது வழக்கம்!
விராலிமலை தொகுதியில் நீண்டகாலமாக அரசியல் செல்வாக்குடன் இருந்து வரும் சி. விஜயபாஸ்கர், தேர்தல் காலத்தை ஒட்டி பொங்கல் பண்டிகையின்போது தொகுதி மக்களுக்கு ‘விஜயபாஸ்கரின் பொங்கல் சீர்’ என்ற பெயரில் பரிசுப் பொருட்களை வழங்கி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நடைமுறையின் தொடர்ச்சியாக தற்போது தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பரிசுத் தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
80 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தீபாவளிப் பரிசு!
விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் உள்ள சுமார் 80 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தீபாவளிப் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு சில்வர் சம்படம் மற்றும் அரை கிலோ குலோப் ஜாமுன் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இந்தப் பொருட்கள் ஒரு பையில் வைத்து பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன.
அந்தப் பையில் ‘என்றும் மக்கள் பணியில் சி. விஜயபாஸ்கர்’ என்ற வாசகத்துடன் அவரது புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.
இடைத்தேர்தலுக்கு முன்பே பரிசுப் பொருட்கள் – சர்ச்சை!
விராலிமலை தொகுதி இடைத்தேர்தல் விரைவில் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே சுமார் 80 ஆயிரம் குடும்பங்களுக்கு தீபாவளிப் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே இடைத்தேர்தலில் தவெக சார்பில் சி. விஜயபாஸ்கருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் எனக் கூறப்படும் சூழலில், அவரது புகைப்படம் மற்றும் பெயர் இடம்பெற்ற பரிசுப் பைகள் தொகுதி மக்களுக்கு வழங்கப்பட்டு வருவது அரசியல் கவனத்தைப் பெற்றுள்ளது.
