சென்னை பெருங்களத்தூரில், திருச்சியில் இருந்து பேருந்தில் வந்த இளைஞரிடம் 55 கிலோ வெள்ளிக்கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்டதாக அளிக்கப்பட்ட புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியைச் சேர்ந்த முகமது உசேன் (26) என்பவர், 55 கிலோ வெள்ளிக்கட்டிகளுடன் பேருந்தில் பயணம் செய்து சென்னை பெருங்களத்தூர் வந்துள்ளார்.

அங்கு பேருந்தில் இருந்து இறங்கி, சென்னை நகருக்குள் செல்வதற்காக மற்றொரு பேருந்தில் ஏற முயன்றதாகக் கூறப்படுகிறது.
அப்போது அங்கு வந்த மர்ம கும்பல், முகமது உசேனைத் தாக்கி அவரிடம் இருந்த 55 கிலோ வெள்ளிக்கட்டிகளைப் பறித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் பீர்க்கங்கரணை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னையில் உள்ள வியாபாரி ஒருவரிடம் ஒப்படைப்பதற்காக வெள்ளிக்கட்டிகளைக் கொண்டு வந்ததாக முகமது உசேன் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
மேலும், கொள்ளைச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் பெருங்களத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து, கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களைக் கண்டறியும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
55 கிலோ வெள்ளிக்கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் தொடர்பாக முகமது உசேனிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
